7.இடையியல்

எண்ணிடைச் சொற்கள்

எண்ணில் வரும் `உம்' `என' என்பன

287உம்மை எண்ணும் எனவென் எண்ணும்
தம்வயின் தொகுதி கடப்பா டிலவே
 

உம்மையான் வருமெண்ணும் எனவான் வருமெண்ணும் இறுதிக்கட் டொகை பெறுதலைக் கடப்பாடாக வுடையவல்ல என்றவாறு. எனவே, தொகை பெற்றும் பெறாதும் வருமென்பதாம்.

எ - டு : `உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
அம்மூ வுருபின' (சொல்- 160)

எனவும், `இசையினுங்குறிப்பினும் பண்பினுந் தோன்றி' (சொல் - 297) எனவும் , `நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்' எனவும் , `உயிரென வுடலென வின்றியமையா' எனவும் , அவ்விருவகையெண்ணுந் தொகை பெற்றும் பெறாதும் வந்தவாறு.

`உயிரென வுடலென வின்றி யமையா' எனவும் அவ்விருவகை யெண்ணுந் தொகைபெற்றும் பெறாதும் வந்தவாறு.

தொகையெனப் பொதுப்படக் கூறியவதனான் எண்ணுப் பெயரே யன்றி அனைத்தும் எல்லா மென்னுந் தொடக்கத் தனவுங் கொள்க.

(39)