சொற்றொறும் வாராது எண்ணேகாரம் இடையிட்டு வரினும் எண்ணுதற் பொருட்டாம் ; எ - று. எ - டு : `மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்' எனவும் , `தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே யுறலோ டாங்கைம் புலனென மொழிப' எனவும் வரும். எண்ணுக் குறித்து வருவன எண்ணப்படும் பெயரெல்லா வற்றோடும் வருதன் மரபாயினும் இடையிட்டு வரினும் அமைக வென அமைத்தவாறு. எனவும் என்றும் சொற்றொறும் வாராது ஒருவழி நின்றும் எண்ணுக் குறிக்குமாலெனின் : - அவை ஒருவழி நின்று எல்லாவற்றோடும் ஒன்றுதலின் ஆண்டாராய்ச்சி யில்லை யென்க. பிறவெண் ஓடாநின்றவழி ஏகாரவெண் இடை வந்த தாயினும் ஓடாநின்ற பிறவெண்ணேயாமென உரைத்தாரால் உரையாசிரிய ரெனின் : - அவ்வாறு விரா யெண்ணியவழிப் பிறவெண்ணாற் பெயர் கொடுப்பின் அதனை ஏகாரவெண்ணென்பாரையும் விலக்காமையானும் , பிறவெண்ணா மென்ற தனாற் பெறப்படுவதொரு பயனின்மையானும் , அவர்க்கது கருத்தன்றென்க. (40) |