கூறப்பட்ட நான்கு சொல்லுள், தருசொல்லும் வருசொல்லுமாகிய இரண்டும் தன்மை முன்னிலையாகிய இரண்டிடத்திற்கும் உரிய; எ-று. எ - டு: எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான், என்னுழை வந்தான்; நின்னுழை வந்தான் எனவும் ; ஈங்கு வந்தான் எனவும் வரும். தரப்படும் பொருளை ஏற்பான் தானும் முன்னின்றானும் ஆகலானும், வரவுதொழில் தன்கண்ணும் முன்னின்றான் கண்ணும் சென்று முடிதலானும், ஈற்றானன்றி இவ்விரு சொல்லும் தன்மை முன்னிலைக்கு உரியவாயினவாறு கண்டுகொள்க. நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய" (சொல் - 28) என்று மூன்றிடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவுங் கொள்ள வைத்தமையான், `பெருவிற லமரர்க்கு வென்றி தந்த' (புறம் - 55) எனவும், `தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது' (அகம் - 36) எனவும், மயங்கி வருவனவும் அமைக்கப்படும், அஃதேல், படர்க்கைச் சொல் மயக்கமும் எய்துமா லெனின் :-அஃது எச்சவியலுள் பெறப்படுதலின்,1 ஈண்டுக் கொள்ளப்படாதென்க. ஒருவன் சேய்நிலத்து நின்றும் அணிநிலத்துப் புகுந்தானாயின் சேய்நிலம் நோக்க அணிநிலம் ஈங்கெனப்படுதலின், அவன் கண் வந்தான், ஆங்கு வந்தான் என்பன இலக்கணமேயாம். இந் நான்கும் கொடைப் பொருளன என்று உரையாசிரியர் கூறினாராலெனின் :- `தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது' என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கது கருத்தன்றென்க. தரவு வரவை யுணர்த்துவனவற்றைத் தருவதும் வருவதும் போலத் தருசொல் , வருசொல் என்றார். (29)
1. எச்சவியலுட் பெறப்படுதலின் என்று கூறியது, " கொடுவென் கிளவிபடர்க்கை யாயினுந், தன்னைப் பிறன் போற் கூறுங் குறிப்பில், தன்னிடத் தியலு மென்மனார் புலவா " என்னும் எச்சவியல் 52- ஆம் நூற்பாவை நோக்கி. |