7.இடையியல்

எண்ணிடைச் சொற்கள்

தொகை பெற்றே முடியும் எண்ணிடைச் சொற்கள்

290அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும்
ஏயி னாகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா.
 

மேற்சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணி னிறுதியும் , இடைச்சொல்லா னன்றிப் பெயரா னெண்ணப்படுஞ் செவ்வெ ணிறுதியும் , ஏகாரத்தான் வரும் எண்ணினிறுதியும், யாதானுமோ ரிடத்து வரினுந் தொகையின்றி நில்லா ; எ - று .

எ - டு : நிலனெனா நீரெனா விரண்டும் எனவும், நிலனென்றா நீரென்றா விரண்டும் எனவும் . நிலநீரென விரண்டும் எனவும் , நிலனே நீரேயென விரண்டும் எனவும் தொகை பெற்று வந்தவாறு.

செவ்வெண் இடைச்சொல்லெண் ணன்றென் றாராயினும் , எண்ணா தலுந் தொகை பெறுதலுமாகிய ஒப்புமையான் ஈண்டுக் கூறினார்.

(42)