வினையொடு நிற்பினும் எண்ணிடைச் சொற்கள் தன்னிலையிற் றிரியா ; அவற்றொடு வருங்கால் அவற்றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும் ; எ - று. எ - டு : உண்டுந்தின்றும் பாடியும் வந்தான் எனவும் ; உண்ணவெனத் தின்ன வெனப் பாடவென வந்தான் எனவும் வரும் . ஒழிந்தவெண்ணொடு வருவனவுளவேற் கண்டு கொள்க. பெரும்பான்மையும் பெயரோடல்லது எண்ணிடைச்சொல் நில்லாமையின் அதனை முற்கூறி, சிறுபான்மை வினையொடு நிற்றலுமுடைமையான் இதனை ஈண்டுக் கூறினார். நினையல் வேண்டு மவற்றவற்றியல்பே யென்றதனான் . எண்ணிடைச் சொல் முற்றுச்சொல்லும் பெயரெச்சமும் பற்றி வாரா தென்பதூஉம் , வினையெச்சத்தோடும் ஏற்பன வல்லது வாராதென்பதூஉம் ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை யென்பதூஉங் கொள்க. சாத்தன் வந்தான் , கொற்றன் வந்தான் , வேடன்வந்தான் என மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது எனச் செவ்வெண்தொகை பெற்று வந்ததென்றாரால் உரையாசிரியரெனின் ; அவை எழுவாயும் பயனிலையுமாய் அமைந்து மாறுதலின் எண்ணப்படாமை யானும் . மூவருமென்பது சாத்தன் முதலாயினோர் தொகையாகலானும் அது போலியுரையென்க. (45) |