7.இடையியல்

புறனடை

எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல்

294என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி
ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே.
 

என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித் தோன்றி எண்ணினுட் பிறவழியும் பிரிந்து சென்று ஒன்றுமிட முடைய ; எ - று.

எ - டு : `வினைபகை யென்றிரண்டி னெச்சம்' (குறள் - 874) எனவும், `கண்ணிமை நொடியென' (நூன்மரபு - எ ) எனவும், `பொருள் கருவிகாலம் வினையிடனொ டைந்தும்' (குறள் - 375) எனவும் அவை ஒருவழி நின்று , வினையென்று பகையென்று எனவும், கண்ணிமையென நொடியென எனவும் பொருளொடு கருவியோடு காலத்தோடு வினையொடு இடத்தோடு எனவும் நின்றவிடத்துப் பிரிந்து பிறவழிச் சென்று ஒன்றியவாறு கண்டு கொள்க.

ஒன்று வழியுடைய வென்றதனால் சொற்றொறு நிற்பதே பெரும்பான்மை யென்பதாம் . சொற்றொறு நின்றவெண் இக்காலத்தரிய . ஒடுவென்பதோ ரிடைச்சொல் எண்ணின்கண் வருத லிதனாற் கொள்க.

இவை மூன்றும் பொருளிற் பிரிந்து எண்ணின்கண் அசையாய் வருதலுடையவென்பது உரையாசிரியர்க்குக் கருத்தென்பாரு முளர் . அசைநிலை யென்பது இச் சூத்திரத்தாற் பெறப் படாமையாலும் , `கண்ணிமை நொடி' என்னஞ் சூத்திரத்து எனவைக் கண்ணிமை யென்பதனோடுங் கூட்டுக வென்றுரைத்தலானும் அவர்க்கது கருத்தன்றென்க.

(46)