7.இடையியல்

புறனடை

இடைச்சொற்களின் பொருளறியுமாறு

295அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே.
 

மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள் , அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென நிலைபெறச் சொல்லப்பட்ட இயல்புடையனவாயினும் , வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றிவேறு பொருளவாயும் அசைநிலையாயுந் திரிந்து வரினும் , ஆராய்ந்து கொள்க ; எ - று.

எனவே, கூறிய முறையான் வருதல் பெரும்பான்மை யென்றும், வேறுபட வருதல் சிறுபான்மை என்றுஞ் சொல்லியவாறாம்.

வினையொடும் பெயரொடு மென்றது, அவை வேறு பொருளவென்றுணர்த்தற்குச் சார்பு கூறியவாறு.

எ - டு : `சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ' (அகம் - 49) எனவும், `கலக்கொண்டேன் கள்ளென்கோ காழ்கொற்றன் சூடென்கோ' எனவும் , ஓகாரம் ஈற்றசையாயும் எண்ணாயும் வந்தது. `ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே' (அகம் - 273) என மா முன்னிலை யசைச் சொல்லாயிற்று. `அதுமற் கொண்கன் றேரே' என மன் அசைநிலையாயிற்று. பிறவுமன்ன.

செய்யுளின்ப நோக்கி வினையொடும் பெயரோடுமென்றார்.

(47)