8.உரியியல்

[உரிச்சொல் இலக்கணம் உணர்த்துவது]

1. பொது இலக்கணம்

உரிச்சொல்லின் இயல்பு

297உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.
 

நிறுத்த முறையானே உரிச்சொல் லுணர்த்தியவெடுத்துக் கொண்டார் ; அதனால் இவ்வோத்து உரியியலென்னும் பெயர்த்தாயிற்று . தமக்கியல்பில்லா விடைச்சொற்போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாகலின், உரிச்சொல்லாயிற்று . பெரும் பான்மையுஞ் செய்யுட் குரியவாய் வருதலின் உரிச்சொல் லாயிற்றென்பாரு முளர்.

உரிச்சொல்லை விரித்துரைக்குமிடத்து, இசை குறிப்புப் பண்பென்னும் பொருண்மேற்றோன்றி . பெயர்க் கண்ணும் வினைக்கண்ணும் தம்முருபு தடுமாறி ஒருசொற் பலபொருட் குரித்தாய் வரினும் பலசொல் ஒருபொருட் குரித்தாய் வரினும் கேட்பானாற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றோடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின்கண் யாதானுமொரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப்படும் என்றவாறு.

என்றது இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர்வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொற் பல பொருட்கும் பல சொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும் அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்தலாகாமையின் , வெளிப்படாதவற்றை வெளிப்பட்டவற்றோடு சார்த்தி, தம்மையெடுத் தோதியே அப்பொருளுணர்த்தப்படுமென்றும் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையுமுணர்த்தியவாறு.

குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது . பண்பு - பொறியானுணரப்படுங் குணம்.

கறுப்பு தவவென்பன பெயர்வினைப்போலி , துவைத்தல் துவைக்குமென்பன பெயர் வினைக்கு முதனிலையாயின , உறு முதலாயின மெய் தடுமாறாது வருதலின் , பெயரினும் வினையினு மெய்தடுமாறி யென்றது பெரும்பான்மைபற்றியெனக் கொள்க.

அவை கூறியவாற்றாற் பொருட்குரியவாய் வருமாறு முன்னர்க் காணப்படும்.

மெய்தடுமாறலும் ஒருசொல் பல பொருட்குரிமையும் பலசொல் ஒருபொருட்குறிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணமாவது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குரியவாய் வருதலேயாம்.

ஒரு சொல் ஒருபொருட் குரித்தாதல் இயல்பாகலாற் சொல்லாமையே முடியுமென்பது.

(1)