8.உரியியல்

சிறப்பிலக்கணம்

உரிச்சொற்களும் `உறு' `தவ' `நனி'

299அவைதாம்
உறுதவ நனியென வரூஉ மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப.
 

வெளிப்பட வாரா உரிச்சொல்லைக் கிளந்தோதி விரிக்கின்றார்.

அவைதாம் என்றது வெளிப்பட வாரா உரிச்சொற்றாம் என்றவாறு. அதற்கு முடிபு `அவைதாம்' `அம்மாமெம்மே மென்னும் கிளவியும்' (சொல்-303) என்புழி உரைத்தாங் குரைக்க.

`உறுபுனல் தந்துலகூட்டி' (நாலடி-85) எனவும், `ஈயாது வீயுமுயிர் தவப் பலவே' (புறம்- 233) எனவும் `வந்து நனி வருந்தினை வாழியென் நெஞ்சே' (அகம்-19) எனவும் உறு தவ நனி யென்பன மிகுதியென்னுங் குறிப்புப் பொருளுணர்த்தும்.; எ - று.

குறிப்புசொற் பரப்புடைமையான் முற்கூறினார்.

(3)