1.கிளவியாக்கம்

3.இடம்

`யாது' `எவன்', என்னும் சொற்கள் அமையும் வகை

31யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும் .
 

யாது எவன் என்னும் இரண்டு சொல்லும் அறியாப் பொருளிடத்து வினாவாய் யாப்புறத் தோன்றும் ; எ -று.

எ - டு: இச் சொற்குப் பொருள் யாது, இச்சொற்குப்பொருள் எவன் என வரும்.

எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாமையின், ஈண்டு அறியாப்பொருள் என்றது பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாத பொருளையாம்.

யா, யாவை, யாவன், யாவர் , யார், யாண்டு, யாங்கு என்னும் தொடக்கத்தன திணையும் பாலும் இடமும் முதலாகிய சிறப்பு வகையானும் சிறிதறியப்பட்ட பொருளனவாகலின், அறியாப்பொருள்வயின் செறியத் தோன்றாமையான், இவற்றையே விதந்து ` அறியாப்பொருள்வயின் செறியத் தோன்றும் ' என்றார் . இவையும் திணையும் பாலும் குறித்து வருதலின் சிறப்புவகையானும் அறியப்பட்ட பொருளவேயன்றோ எனின்:- அற்றன்று இச்சொற்குப் பொருள் யாது, எவன் என்று வினாயவழி, இறுப்பானும், அஃறிணை யொருமையும் பொதுமையும் துணிந்து அவற்றுள் பகுதியறிதற்கு வினாவுகின்றானல்லன் பொதுவகையான் வினாவுகின்றான் என்று உணரும். ஆகலின் அவ்வாறாதல் வழக்கிசைத்து வினாவுவானதும் இறுப்பானதும் குறிப்பொடு படுத்துஉணர்க.

முன்னர் வழுவமைத்தற்கு அவை இன்னபொருட்கு உரிய என அவற்றது இலக்கணம் கூறியவாறு.

(31)