1.கிளவியாக்கம்

3.இடம்

சினைமுதற் சொல் அமையும் வகை

33இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின்1 உம்மை வேண்டும்.
 

கேட்போரான் இத்துணை யென்று அறியப்பட்ட சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும் வினைப்படு தொகுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக; எ-று.

எ - டு: ` பன்னிரு கையும் பாற்பட வியற்றி ' (திருமுருகா - 118. திருச்சீரலைவாய்) எனவும், ` முரசு முழங்குதானை மூவருங்டி ' (பொருநராற் - 54) எனவும் வரும்.

அறிந்த சினைமுதற்கிளவி எனவே, முன்னறியப்படாக்கால், முருகற்குக் கை பன்னிரண்டு, தமிழ்நாட்டிற்கு வேந்தர்மூவர் என உம்மை பெறாது வரும் என்பதாம்.2

ஐந்தலைநாகம் உடன்றது, நான்மறை முதல்வர் வந்தார் என்புழி, இனைத்தென அறிந்த சினைமுதற்கிளவியாயினும், வினைப்படுதொகுதி யன்மையின், உம்மை பெறாவாயின. அஃதேல், பன்னிருகையும் என்புழியும் தொகுதிப் பெயர் வினையொடு தொடராது கையென்பதனோடு ஒட்டி நிற்றலின், வினைப்படு தொகுதியன்றாம் பிறவெனின்:-ஒட்டி நின்றதாயினும், ஐந்தலைநாகம், நான்மறை முதல்வர் என்பனபோலாது இருசொல்லும் ஒரு பொருண் மேல் வருமாதலின், கையென்பதனோடு இயைந்த இயற்றி என்றும் வினைதொகுதிப் பெயரோடும் இயைந்ததாம்; அதனான் அதுவினைப்படு தொகுதியாமென்பது. அஃதேல், கண்ணிரண்டும் குருடு; எருதிரண்டும் மூரி எனப்பெயர் கொண்டவழி உம்மை பெறுமாறு என்னையெனின் :- பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதியாம் என்க. ஐந்தலை, நான்மறை என்பனவற்றிற்கு நாகம், முதல்வர் என்பன முடிக்குஞ்சொல் அன்மையின், வினைப்படு தொகுதி யாகாமை யுணர்க.

`சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்' என்பதனால் சினைமுதற் கிளவி யென்றாராயினும், பிறவாத பண்பு முதலாயினவும் கொள்ளப்படும்.

எ - டு: சுவையாறு முடைத் திவ்வடிசில் கதியைந்து முடைத்திக் குதிரை என வரும்.

`இருதோள் தோழர்பற்ற' எனவும், ` ஒண்குழையொன்று ஒல்கியெருத்தலைப்ப ' எனவும் உம்மையின்றி வந்தனவாலெனின் : - ஆண்டும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றன வென்பது.

(33)

1. `வினைப்படு தொகுதியின்' - முழுத்தொகையையும் குறித்து வினையொடு முடியும்போது. வினை - முடிக்குஞ்சொல்.

2. `முருகற்குக் கை பன்னிரண்டு ', ` தமிழ்நாட்டிற்கு வேந்தர் மூவர் ' என்பன முன்னறியப் படாமையானன்று, வினைப்படு தொகுதியன்மையானேயே உம்மை பெறா வாயின.