1.கிளவியாக்கம்

3.இடம்

நிலையாமைக்குரிய சொல் அமையும் வகை

34மன்னாப் பொருளும் அன்ன இயற்றே.
 

இல்லாப் பொருட்கும் இடமும் காலமும் பொருளும் முதலாயினவற்றோடுபடுத்து இன்மை கூறுதற்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக; எ-று.

எ - டு: பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லையெனவும், குருடு காண்டல் பகலுமில்லை எனவும் `உறற்பால நீக்கல் உறுவர்க்கு மாகா ' (நாலடி - 104) எனவும் வரும். இல்லாப் பொருட்கு ஒருகாலும் நிலையுறு தலின்மையின், ` மன்னாப் பொருள் ' என்றார்.

இடம் முதலாயினவற்றோடு படுத்தற்கண் என்பது ஏற்புழிக்கோடல் என்பதனால் பெற்றாம். அவற்றொடு படாதவழிப் பவளக்கோட்டு நீலயானையில்லை என உம்மையின்றி வருமென்பதாம்.

முற்றும்மையும் எச்ச உம்மையுமாகிய வேறுபாடுடையவேனும், உம்மை பெறுதல் ஒப்புமையால், ` அன்ன இயற்று ' என்றார்.

இரண்டு சூத்திரத்தானும் மரபுவழுக் காத்தவாறு.

(34)