யாதாயினும் ஒரு பொருளையாயினும் ஒருவன் அல்ல தில்லென்னும் வாய்பாட்டான் இல்லையென லுறின், அப்பொருள் தன்னையே கூறாது அப்பொருளல்லாத பிறிது பொருள் கூறுக: - எ-று. எ - டு: பயறுளவோ வணிகீர் என்று வினாயவழி - உழுந்தல்லதில்லை; கொள்ளல்லதில்லை என அல்லதில்லென்பான் பிறிது பொருள் கூறியவாறு கண்டுகொள்க. அல்லதில்லெனின் எனப் பொருள்பற்றி ஓதினராகலின், அல்லதில்லென்னும் வாய்பாடே யன்றி, உழுந்தன்றியில்லை உழுந்தேயுள்ளது என அப்பொருள்படுவன எல்லாம் கொள்க. உழுந்தல்லதில்லை எனப் பிறிது பொருள் கூறாது பயறல்லதில்லையென அப்பொருள் கூறின் பயறுள்ள அல்லன வில்லை யென மறுதலைப் பொருள்பட்டுச் செப்பு வழுவாமாறு அறிக. யாதானுமாக அல்லதில்லெனின் பிறிதுபொருள் கூறுக என எஞ்சாமல் தழீஇயாப்பு றுத்தற்கு எப் பொருளாயினும் என்றார். அல்லதில் என்பதற்குத் தன்னுழையுள்ளதல்லது என்றும், அப்பொருளல்லாப் பிறிதுபொருள் கூறல் என்பதற்கு இனப் பொருள் கூறுக என்றும் , உரைத்தாரால் உரையாசிரியரெனின் :- பயறுளவோ என்று வினாயவழிப் பயறில்லை யென்றாற்படும் வழுவின்மையானும், உள்ளதல்ல தென்றல் கருத்தாயின் ஆசிரியர் அல்லதெனக் குறித்த பொருள் விளங்காமையின் அகப்படச்1 சூத்திரியா ராகலானும் பாம்புணிக் கருங்கல்லும்2 பயறும் விற்பா னொருவனுழைச் சென்று பயறுளவோ என்றவழிப் பாம்புணிக் கருங்கல்லதில்லை யென்றால் இனப்பொருள் கூறாமையாற் பட்ட இழுக்கின்மை யானும். அவை போலியுரை யென்க. அல்லதூஉம், இனப்பொருள் கூறுக என்பதே கருத்தாதயின், அப் பொருளல்லா இனப் பொருள் கூறல் என்னாது பிறிது பொருள் கூறல் என்னார் ஆசிரியர், அதனானும் அஃதுரையன்மை யுணர்க. (35)
1. அகப்பட - குறை, குன்றக் கூறலாக. 2. பாம்புணிக் கருங்கல் - பாம்பின் நஞ்சையுண்ணுங் கருங்கல். |