1.கிளவியாக்கம்

3.இடம்

பொருட்பெயரும் சுட்டுப்பெயரும் அமையும் வகை

37பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே.
 

சுட்டானன்றிப் பொருள் வரையறுத்து உணர்த்தாச் சுட்டுப்பெயரால் கூறினும், பொருள் வேறாகாது இப்பயறெனச் சுட்டிக் கூறிய பொருளேயாம்; எ - று.

என் சொல்லியவாறோ எனின்: - இவையல்லதில்லை என்ற வழி, இவையென்பது பயற்றையே சுட்டாது உழுந்து முதலாயினவற்றிற்கும் பொதுவாய் நிற்றலின் வழுவாமன்றே; ஆயினும், முன் கிடந்த பயறு காட்டி இவை யென்றானாகலின், அவற்றையே சுட்டு முதலானமைக்கவெனச் செப்பு வழுவமைத்தவாறு.

சாதியும் பண்புந் தொழிலும்1 முதலாயினபற்றி ஒருபொருளை வரைந்துணர்த்தாது எல்லாப் பொருள்மேலுஞ் சேறலின் "பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் " என்றார்.

வேறுபடாது, ஒன்றாகும் என்பனவற்றுள் ஒன்றே அமையுமெனின்:- பொருள் வரைந்துணர்த்தும் பெயரொடு பொருள் வரைந்துணர்த்தாச் சுட்டுப் பெயர் வேறுபாடுடைத் தேனும், ஒரு பொருள் மேல் முடிதலின் ஒரு பொருட்டாமென்பது விளக்கிய பொருள் வேறுபடாது ஒன்றாகும் என்றார்.

அப்பொருள் கூறுதற்கண் என்னாது பொதுப்படக் கூறிய வதனால், பிறிது பொருள் கூறும்வழியும் இவையல்லதில்லை யெனச் சிறுபான்மை சுட்டுப்பெயரால் கூறினும் அமையும் என்பதாம்.

யானை நூல் வல்லானொருவன் காட்டுட்போவுழி ஓர் யானை யடிச்சுவடு கண்டு இஃதரசுவா வாதற்கேற்ற இலக்கண முடைத்து என்ற வழியும்,
இஃதோர்2 செல்வற் கொத்தனம் யாமென
மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே" (அகம் - 26)
என்புழியும் சுட்டுப்பெயர் பொருளொடு புணராது நிற்றலின், அவற்றையே அமைக்கின்றது இச் சூத்திரம் என்பாரு முளர்.

(37)

1. மொச்சைப்பயறு, கடலைப்பயறு என்பன குலம் (சாதி) பற்றியன; பச்சைப்பயறு, காராமணி என்பன பண்பு பற்றியன; பொரிகடலை. சுண்டற்கடலை என்பன தொழில் பற்றியன.

2. (பா-ம்.) இஃதோ.