1.கிளவியாக்கம்

3.இடம்

பொருட்பெயரும் சுட்டுப்பெயரும் அமையும் வகை

38இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.
 

இயற்பெயரும்1 சுட்டுப் பெயரும் ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிதுவினை கோடற்கு ஒருங்கு நிகழுங்காலம் தோன்றுமாயின், உலகத்தார் சுட்டுப் பெயரை முற்படக் கூறார், இயற்பெயர்க்கு வழியவாகக் கூறுவரென்று சொல்லுவார் புலவர்; எ - று.

வினைக்கொருங்கியலுங்கால் அப்பெயர் எழுவாயாயும் உருபேற்றும் நின்றன எல்லாங் கொள்ளப்படும்.

வினைக்கென்புழி அவ்விருபெயரும் ஓருவினை கோடலும் தனித்தனி வினைகோடலுங் கொள்க. ஒருங்கியலும் என்ற தனால் அவை ஒரு பொருள்மேல் வருதல் கொள்க.

எ - டு: சாத்தன் அவன் வந்தான், சாத்தன் வந்தான் அவன் போயினான் எனவும், சாத்தி வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க எனவும் வரும்.

அவன்தான் வந்தான், அவனொருவனும் அறங்கூறும், ஈதொன்று குருடு என இயற்பெயரல்லா விரவுப்பெயர்க்கும் உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் வரையறையின்றிச் சுட்டுப்பெயர் முற்கிளக்கவும் படுதலின்,இயர்பெயர்க் கிளவி யென்றார். அவ்வாறு அவை முற்கிளக்கவும் படுவது ஒருவினை கோடற்கண்ணே யென்பது. அற்றேல், அவை முடவன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க, நங்கை வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க, குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க எனத் தனித்தனி வினைகோடற்கண் சுட்டுப்பெயர் பிற்கிளக்கப்படுதல், முன்னையதற்குத்2 தன்னின முடித்தலினாலும் ஏனையிரண்டற்கும்3 இயற்பெயரென்ற மிகையானுங்4 கொள்க.

பிறிதுவினை கோடற்கண் எனவே, அவன் சாத்தன், சாத்தனவன் என ஒன்றற் கொன்று பயனிலையாதற்கண்ணும், ஒரு பொருண்மேல் நிகழும் எனவே, அவனுஞ் சாத்தனும் வந்தார், சாத்தனும் அவனும் வந்தார் என வேறு பொருளவாய் வருதற்கண்ணும், யாது முற்கூறினும் அமையும் என்பதாம்.

வினை என்றது முடிக்குஞ் சொல்லை.

சுட்டுப்பெயர் யாண்டும் இயற்பெயர்வழிக் கிளக்கப்படுமென யாப்புறுத்தற்கு, முற்படக்கிளவார் என்றும், இயற் பெயர் வழிய என்றுங் கூறினார்.

சுட்டுப்பெயர் என்றாராயினும், அகர இகரச் சட்டுப் பெயரே கொள்க5.

இதுவும் ஒர் மரபு வழாநிலை.

(38)

1. இயற்பெயர் - ஒருபொருளுக்கு இயல்பாக எற்பட்ட அல்லது முதலாவது இடப்பட்ட பெயர்; மக்களின் பிள்ளைப் பெயரெல்லாம் இயற்பெயரே.

2. முன்னையது-விரவுப்பெயர் (முடவன்).

3. ஏனையிரண்டு - உயர்திணைப் பெயரும் (நங்கை) அஃறிணைப் பெயரும் (குதிரை).

4. இயற்பெயரென்ற மிகை - நூற்பாவில் இயற்பெயர் என்று மறுமுறையுங் கூறியது.

5. உகரச்சுட்டு வழக்கற்றமையின் , " அகர இகரச் சுட்டுப்பெயரே கொள்க. " என்றார்.