8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`கடி' என்னுஞ் சொல்

383கடியென் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்ச முன்தேற்று ஆயீரைந்தும்
மெய்படத்தோன்றும் பொருட்டாகும்மே.
 

கடியென்னு முரிச்சொல் வரைவு முதலாகிய பத்துக் குறிப்பு முணர்த்தும் ; எ - று.

எ - டு : `கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு' (குறள்-658) என வரைவும், `கடிநுனைப் பகழி எனக் கூர்மையும்' கடிகா, (களவழி-26) எனக் காப்பும் `கடிமலர்' எனப் புதுமையும், `கடுமான்' (அகம்-134) என விரைவும், `கடும்பகல்' (அகம்-148) என விளக்கமும், `கடுங்கா லொற்றலின்' (பதிற்-25) என மிகுதியுங், `கடுநட்பு' எனச் சிறப்பும் ,`கடியையா னெடுந்தகை செருவத் தானே' என அச்சமும் `கொடுஞ்சுழிப்புகார்த்தெய்வ நோக்கிக் கடுஞ்சூ டருகுவ னினக்கே' (அகம்-110) என முன்தேற்றும் உணர்த்தியவாறு கண்டு கொள்க.

முன்தேற்று- புறத்தின்றித் தெய்வ முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல்.

(87)