7.இடையியல்

சொல்லும் பொருளும்

உரிச்சொற் பொருள் மரபை ஒத்தது

389மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்.
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியால் புணர்த்தனர் உணர்த்தல்
தத்த மரபில் தோன்றுமன் பொருளே.
 

இச்சொல் இப்பொருட் குரித்தென மேற்கூறப்பட்ட உரிச்சொ லெல்லாவற்றையும், அவற்று முன்னும் பின்னும் வருமொழிகளை ஆராய்ந்து, அம்மொழிகளுட் டக்க மொழியாலே ஒரு பொருளுணர்த்துக; இவ்வாறுணர்த்தவே; வரலாற்று முறைமையாற் றத்தமக் குரித்தாய பொருள் விளங்கும்; எ - று.

இஃது என் சொல்லியவாறோ வெனின்:-

`உறுதவ நனியென வரூஉ மூன்று
மிகுதி செய்யும் பொருள வென்ப.'(சொல்.299)
எனவும்,

`செல்ல லின்ன லின்னா மையே.'(சொல்.302)

எனவும், ஓதியவழி அவை வழக்கிடைப் பயின்ற சொல்லன் மையான் இவை மிகுதியும் இன்னாமையு முணர்த்துமென்று ஆசிரியராணையாற் கொள்வதல்லது வரலாற்றாற் பொருளுணர்த்தப்படவோ வென்று ஐயுறுவார்க்கு `உறுகால்' (நற்.37) `தவப்பல (புறம்-235) `நனிசேய்த்து' (ஐங்குறு-443) எனவும், `மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்' (அகம்-22) எனவும், முன்னும் பின்னும் வருஞ்சொன் னாடி அவற்றுள் இச்சொல்லோடு இவ் வுரிச்சொல் இயைபுமென்று கடைப்பிடிக்கத் தாம் புணர்த்த சொற்கேற்ற பொருள் விளங்குதலின், உரிச்சொல்லும் வரலாற்றாற் பொருளுணர்த்து மென்பது பெறப்படுமென ஐய மகற்றியவாறெனக் கொள்க. வரலாற்றாற் பொருளுணர்த்தா வாயின் குழுவின் வந்த குறிநிலைவழக்குப்போல இயற்கைச் சொல்லெனப்படா வென்பது.

(93)