இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினைக்கொருங்கியலும்வழிச் சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்து; எ - று. எ - டு: அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர்வாழ்த்தி - முகனமர்ந்து அன்னை யலர்கடப்பந் தாரணியில் என்னைகொல் பின்னை யதன்கண் விழைவு." எனவரும். இதனுள் சேந்தன் என்பது இயற்பெயர். ஒருவினை கொள்வழிச் சுட்டுப்பெயர் முற்கிளத்தல் வந்தவழிக் கண்டு கொள்க. இது செய்யுளிடத்து மரபுவழு அமைத்தவாறு. (39) |