7.இடையியல்

சொல்லும் பொருளும்

உரிச்சொற்களில் எழுத்துப் பிரிந்து இசைத்தல் இல்லை

395எழுத்துப்பிரிந் திசைத்தல் இவணியல்பு இன்றே.
 

முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறு வேறு பொருளுணர்த்தல் உரிச்சொல்லிடத் தியைபுடைத்தன்று; எ - று.

இவணியல்பின்றெனவே, எழுத்துப் பிரிந்து பொருளுணர்த்தல் பிறாண்டு இயல்புடைத் தென்பதாம். அவையாவன; வினைச்சொல்லும் ஒட்டுப்பெயருமாம். பிரிதலும் பிரியாமையும் பொருளுணர்த்து வனவற்றிற்கேயாகலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாதவாறு போல, இடைச்சொற்கு இவ்வாராய்ச்சி யெய்தாமை யறிக.

தவநனியென்னுந் தொடக்கத்தன குறிப்பு வினையெச்சம் போலப் பொருளுணர்த்தலின், அவைபோலப் பிரிக்கப்படுங் கொல்லோ வென்றையுறாமை ஐயமகற்றியவாறு.

(97)