கிளவியாக்க முதலாக உரியிய லிறுதியாகக் கிடந்த ஓத்துக்களுள் உணர்த்துதற் கிடமின்மையான் உணர்த்தப்படாது எஞ்சி நின்ற சொல் லிலக்கணமெல்லாந் தொகுத்துணர்த்திய வெடுத்துக்கொண்டார். அதனான் இவ்வோத்து எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. `கண்டீரென்றா' (சொல்-425) எனவும், `செய்யாயென்னு முன்னிலை வினைச்சொல்' (சொல்-450) எனவும், `உரிச்சொன் மருங்கினும்' (சொல்-459) எனவும், `ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி' (சொல்-491) எனவும், இவை முதலாகிய சூத்திரங்களா னுணர்த்தப் பட்ட அசைநிலையும், வினைச்சொல் லிலக்கணமும் வழுவமைதியும் அவ்வோத்துக்களு ளுணர்த்தாது ஈண்டுணர்த்திய தென்னையோ வெனின்:- அதற்குக் காரணம் அவ்வச்சூத்திரமுரைக்கும் வழிச் சொல்லுதும். பலபொருட்டொகுதிக்கு ஒன்றனாற் பெயர் கொடுக்குங்கால் தலைமையும் பன்மையும் பற்றிக் கொடுப்பினல்லது பிறிதாறின்மையானும், தலைமையும் பன்மையும் எச்சத்திற்கின்மையானும் பத்து வகை யெச்சம் ஈண்டு உணர்த்தலான் எச்சவியலாயிற்றென்றல் பொருந்தாமை யுணர்க. செய்யுட்குரிய சொல்லும், அவற்றிலக்கணமும், அவற்றாற் செய்யுள் செய்வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள்கோளும், எடுத்துக் கோடற்க னுணர்த்துகின்றார். இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும் என அத்துணையே செய்யுளீட்டுதற்குரிய சொல்லாவன: எ - று. இயற்சொல்லானுஞ் செய்யுட்சொல்லாகிய திரிசொல்லானுமேயின்றித் திசைச் சொல்லும் வட சொல்லும் இடைவிராய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப்பாடைச் சொல்லுஞ் செய்யுட்குரியவோ வென்றையுற்றார்க்கு, இந்நான்கு சொல்லுமே செய்யுட் சூரியன; பிறபாடைச் சொல் உரியவல்லவென்று வரையறுத்தவாறு. செய்யுள் செய்யலாவது ஒருபொருண்மேற் பலசொற்கொணர்ந் தீட்டலாகலான் ஈட்டலென்றார். பெயர்வினையிடையுரி யென்பன இயற்சொற் பாகுபாடாகலான், இயற்சொல் அந்நான்கு பாகுபாட்டானுஞ் செய்யுட் குரித்தாம் திரிசொற் பெயராயல்லது வாரா. என்மனாரென்பதனை வினைத்திரிசொல் என்பாருமுளர். அஃது `என்றிசினோர்' `பெறலருங்குரைத்து' (புறம்-5) என்பன போலச் செய்யுண்முடிபு பெற்று நின்றதென்றலேபொருத்தமுடைத்து. தில்லென்னு மிடைச்சொல், தில்லவென்றானுந் தில்லை யென்றானும் திரிந்து நின்றவழி அவை வழக்கிற்கு முரியவாகலின் திரிசொல்லெனப்படாது `கடுங்கால்' என்புழிக்கடியென்னு முரிச்சொல், `பெயரினும் வினையினு மெய்தடுமாறி' (சொல்-234) என்பதனாற் பண்புப்பெயராய்ப் பெயரொடு தொக்கு வழக்கினுட் பயின்று வருதலால், திரிசொல்லெனப்படாது. திசைச்சொல்லுள் ஏனைச்சொல்லுமுளவேனும், செய்யுட்குரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட் குரியவாய் வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க. (1)
1.செய்யுளீட்டச் சொல் நான்கு :- தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் சொற்கள் இலக்கண முறையிற் போன்றே சொற்பிறப்பியல் முறையிலும் நான்காக வகுக்கப்பட்டன. முதலாவது தன்சொல் அயற் சொல் என்கிற முறையில் தென்சொல் வடசொல் என்ற பாகுபாடும், பின்பு தன் சொற்குள் செந்தமிழ் கொடுந்தமிழ் என்கிற முறையில் நாட்டுச்சொல் திசைச்சொல் என்ற பாகுபாடும், பின்பு நாட்டுச் சொற்கள் இயல்பும் திரியும் பற்றி இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என நான்கமைந்தன. ஆங்கிலத்தில் சொற்களை primitives drivatives என இரண்டாய்ப் பகுப்பதாலும், `திரிபின்றி இயல்பாகிய சொல்லாகலின் இயற்சொல்லாயிற்று' என்றும், `திரிசொல்லது திரிவாவது உறுப்புத்திரிதலும் முழுவதுந் திரிதலுமென இருவகைத்து, கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன' என்றும் சேனாவரையரும் பிறரும் கூறுவதாலும்; இயற்சொல்லையுந் திரிசொல்லையும் முறையே எண்சொல் அருஞ்சொல் என்று கொள்ளாமல், இயல்பான சொல் திரிக்கப்பட்ட சொல் என்று கொள்வதே பொருத்தமாம். தெலுங்கு கன்னடம் முதலிய திராவிட மொழிகள் முற்காலத்தில் கொடுந்தமிழா யிருந்தமையின், அவற்றின் சொற்கள் திசைச் சொற்கள் எனப்பட்டன. இன்று அம்மொழிகள் ஆரியக்கலப்பால் வேற்று மொழியாய் வழங்குகின்றமையான், வேற்று மொழிச் சொற்களையெல்லாம் திசைச் சொல்லெனக் கூறுவது தவறாகும், முற்காலத்தில் திசைச்சொல்லாகக் காட்டப்பட்ட கொடுந்தமிழ்ச் சொற்களே இன்றுந் திசைச்சொல்லாகும். வடமொழி யொன்றே முற்காலத்தில் தமிழகத்து வழங்கிய அயன்மொழி. அதனால், அதன் சொல் அம்மொழிப் பெயராலேயே வட சொல் லெனப்பட்டது. அதுபோல் இப்போது தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களும் ஆங்கிலச்சொல் போர்த்துகீசியச்சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே அழைக்கப்படல் வேண்டும். |