அந்நான்கனுள் இயற்சொல்லென்று சொல்லப்பட்ட சொற்றாம், செந்தமிழ்நிலத்து வழக்காதற்குப் பொருந்திக் கொடுந்தமிழ் நிலத்துந் தம்பொருள் வழுவாம லுணர்த்துஞ் சொல்லாம்; எ - று. அவையாவன : நிலம் நீர், தீ, வளி, சோறு, கூழ், பால் ,தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன. செந்தமிழ் நிலமாவன, வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் றெற்கும் ,கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்.1 திரிபின்றி இயல்பாகிய சொல்லாகலின் இயற்சொல் லாயிற்று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவா கலின் இயற் சொல்லாயிற் றெனினுமையும் நீரென்பது ஆரியச் சிதைவாயினும் அப் பொருட்கு அதுவே சொல்லாய்ச் செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் வழங்கப்படுதலான் இயற்சொல் லாயிற்று. பிறவு மிவ்வாறு வருவன இயற்சொல்லாகக் கொள்க. தாமென்பது கட்டுரைச் சவைபட நின்றது. (2)
1.சேனாவரையர் செந்தமிழ் நிலமாகக் கூறியவிடம் பெரும்பாலும் பாண்டியநாட்டிற்கப்பாற்பட்டாதாய்ச் சோழநாட்டின் தென்பகுதியாயிருத்தலின், தவறாகும். பாண்டிநாடே தமிழ் நாடென்றும் பாண்டியனே தமிழ்நாடனென்றும் நிகண்டுகள் கூறாநிற்பவும். `` வியாத்தமிழுடையான்.... பாண்டியன் '' என்றொரு பழம் புலவரும் `` பாண்டியநின்னாட்டுடைத்து நல்ல தமிழ் '' என்று ஒளவையாரும், `` தமிழ் நிலை பெற்ற... மதுரை '' என்று நத்தத்தனாரும், ``கூடலினாய்ந்த வொண்டீந்தமிழ் '' என்று மாணிக்க வாசரும் பாடியிருப்பவும், முச்சங்கங்களையும் முறையே இரீஇ முத்தமிழ் வளர்த்தவர் பாண்டியராயே யிருப்பவும், இவற்றை எட்டுணையும் நோக்காது மதுரைக்கு வடக்கே செந்தமிழ் நாட்டைச் சேனாவரையர் குறித்தது வியப்பிற் கிடமானது. ``செந்தமிழ் நாடாவது : - வையையாற்றின் வடக்கும்..... மருவூரின் மேற்கும்'' என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரிநிலமாதல் வேண்டுதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்கு மாறு:- ``வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளுநாடி'' என்றமையானும், இதனுள் தமிழ் கூறு நல்லுலகமென விசேடித்தமையானும் கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கடமலையின் வடக்காகிய நாடுகளையொழித்து வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும். குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப என்பர் தெய்வச் சிலையார்.இன்றும் பாண்டி நாடே தமிழ்வழக்கிற்குச் சிறந்திருப்பது கவனிக்கத்தக்கது. |