9.எச்சவியல்

சொற்களின் வகை

திரிசொல்

399ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த ஒரு சொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி.
 

ஒருபொருள் குறித்து வரும் பல சொல்லும் பலபொருள் குறித்து வரும் ஒரு சொல்லுமென இருவகைப்படுந் திரிசொல் ; எ - று.

வெற்பு, விலங்கல், விண்டு, என்பன ஒரு பொருள் குறித்தவேறு பெயர்க் கிளவி. எகின மென்பது அன்னமும் கவரி மாவும் புளிமாவும் நாயு முணர்த்தலானும், உந்தி யென்பது யாழ்ப்பத்தலுறுப்பும் கொப்பூழும் தேர்த்தட்டும் கான்யாறு முணர்த்தலானும், இவை வேறு பொருள் குறித்த ஒரு சொல்.

திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதுந் திரிதலுமென இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் தரிந்தன.முழுவதுந் திரிந்தனவற்றைக் கட்டிய வழக்கென்பாரு முளர். அவை கட்டிய சொல்லாமாயிற் செய்யுள் வழக்கா மாறில்லை. அதனால் அவையுந் திரிவெனல் வேண்டு மென்பது.

அஃதேல், பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒரு சொல் பலபொருட்குரித்தாதலும், உரிச்சொன் முதலாகிய இயற்சொற்கு முண்மையான் அது திரிசொற் கிலக்கணமாமா றென்னை யெனின்:-அது திரிசொற்கிலக்கண முணர்த்தியவாறன்று; அதனது பாகுபாடுணர்த்தியவாறு. திரிபுடைமையே திரிசொற்கிலக்கணமாதல் `சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்' என்பதனாற் பெற வைத்தார், கிள்ளை மஞ்ஞை யென்பன ஒருசொல் ஒருபொருட்குரித்தாகிய திரிசொல்லாதலின் இருபாற் றென்றல் நிரம்பாதெனின்:- அற்றன்று; ஆசிரியர் இருபாற்றென்ப திரிசொற்கிளவி எனத் தொகை கொடுத்தாராகலின், கிள்ளை மஞ்ஞை யென்பனவற்றோடு ஒருபொருட் கிளவியாய் வரும் திருசொலுளவாக லொன்றோ, இவை பிறபொருள் படுதலொன்றோ, இரண்டனு ளொன்று திட்ப முடைத்தாதல் வேண்டும். என்னை? ஆசிரியர் பிற கூறாமையினென்பது.

திரித்துகொண்டது இயற்கைச் சொல்லான் இன்பம் பெறச் செய்யுளீட்ட லாகாமையானன்றே; அதனாற் றிரிசொல்லெனவே, செய்யுட்குரித்தாதலும் பெறப்படும்.

(3)