சுட்டை முதலாகவுடைய காரணப் பொருண்மையை உணர்த்தும் சொல்லும் சுட்டுப் பெயர்போலத் தன்னாற் சுட்டப்படும் பொருளை உணர்த்தும் சொற்குப் பின் கிளக்கப்படும் ; எ - று. ஈண்டுச் சுட்டப்படும் பொருள் தொடர்மொழிப் பொருள். எ - டு: சாத்தன் கையெழுதுமாறுவல்லன். அதனால் தந்தை உவக்கும் சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனால் கொண்டான் உவக்கும் எனவரும். சுட்டுமுதலாய காரணக்கிளவி உருபேற்று நின்ற சுட்டு முதற்பெயரோடு ஒப்பதோர் இடைச்சொல்லாகலின். ` சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும் ' என்றார். செயற்கென்னும் வினையெச்சம் , உருபேற்று நின்ற தொழிற் பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும், உருபும் பெயரும் ஒன்றாகாது2 பகுப்பப் பிளவுபட் டிசையாது ஒன்றுபட்டிசைத்தலான், அதனின் வேறாயினாற்போல இதுவும் உருபேற்ற சுட்டுப்பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும் பிளவுபட்டிசையாது ஒன்றுபட்டிசைத்தலான், வேறாகவே கொள்ளப்படுமென்பது. அஃதேல், சாத்தன் வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று எனத் தொடர்மொழிப் பொருளையும் சுட்டிவரும் சுட்டுப்பெயர் கூறாது காரணக் கிளவியே கூறிய தென்னை யெனின்:- அவ்வாறு வருவன தன்னின முடித்தல் என்பதனால் அடங்கும். ஈண்டுச் சுட்டப்படும் பொருளை யுணர்த்துவது பெயரன்மையின், சுட்டுப் பெயரியற்கை என்றது வழக்கினகத்துச்சுட்டப்படும் பொருளை உணர்த்தும் சொற்குப் பின்னிற்றலும் செய்யுளகத்து முன்னிற்றலுமாகிய அத்துணையேயாம். செய்யுட்கண் முன்னிற்றல் வந்தவழிக் கண்டுகொள்க. பொருள் பற்றாது பண்பு முதலாயின பற்றி வந்த சுட்டாதலின் வேறு ஓதப்பட்டதென்று உரையாசிரியர் கூறினாராலெனின் :- சாத்தன் வந்தான் அஃதரசற்குத்துப்பாயிற்று எனவும், கிழவன் பிரிந்தான் அதனைக் கிழத்தி யுணர்ந்திலள் எனவும், எழுவாயாயும் ஏனை வேற்றுமை யேற்றும் அச் சுட்டுப் பயின்று வருதலால் பண்பு முதலாயினவற்றைச் சுட்டும் சுட்டெனப் பொதுவகையால் கூறாது காரணக் கிளவி என ஒருசார் வேற்றுமைக்குரிய வாய்பாடு பற்றி ஓதுதல் குன்றக் கூறலாகலானும், கூட்டுப் பெயராயின் சுட்டு முதலாகிய காரணக் கிளவி என்றும் சுட்டுப் பெயரியற்கையின் செறியத் தோன்றும் என்றும் கூறுதல் பொருந்தாமை யானும், அது போலியுரை யென்க. இதனான் வழக்கின்கண் மரபு வழாநிலையுஞ் செய்யுட் கண் மரபு வழுவமைதியும் உணர்த்தினார். (40)
1. சுட்டு முதலாகிய காரணக்கிளவி - அதனால் என்னும் இணைப்புச் சொல். 2. செயற்கு எனும் வினையெச்சம் பெயரும் உருபுமாய்ப் பிளவுபட்டிசையாது உருபேற்று நின்ற தொழிற் பெயரினின்று வேறுபட்டாற்போல, அதனால் என்னும் சுட்டிடைச் சொல்லும் உருபேற்ற சுட்டுப் பெயரினின்று வேறுபடும். |