வடசொற் கிளவியாவது வடசொற்கே உரிய வெனப் படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம்; எ - று. எனவே,பொதுவெழுத்தா னியின்ற வடசொல்லும் செய்யுட் செய்தற்குச் சொல்லாமென்றவாறாயிற்று. அவை வாரி, மேரு , குங்குமம், மனு என்னுந்தொடக்கத்தன. வடசொல்லாவது வடசொல்லோடொக்குந் தமிழ்ச் சொல்லென்றாரால் உரையாசிரியரெனின் : - அற்றன்று ; ஒக்குமென்று சொல்லப்படுவன ஒரு புடையா னொப்புமையும் வேற்றுமையுமுடைமையான் இரண்டாகல் வேண்டும், இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல்லிலக்கண முடைமையான் இரண்டுசொல்லெனப்படா ; அதனான் ஒத்தல் யாண்டையது ; ஒரு சொல்லேயாமென்பது . ஒரு சொல்லாயினும் ஆரியமுந் தமிழுமாகிய இடவேற்றுமையால் வேறாயினவெனின் :- அவ்வாறாயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இட வேற்றுமையாற் சோறு கூழென்னுந் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும் ; அதனான் இடவேற்றுமையுடையவேனும் ஒரு சொல் லிலக்கணமுடைமையான் ஒரு சொல்லேயாம் . ஒரு சொல்லாய வழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட் செல்லாமையெனும் வடசொல் எல்லாத்தேயத்திற்கும் பொதுவாகயானும் , இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டன வெனல் வேண்டும் ; அதனான் அது போலியுரையென்க . அல்லதூஉம் அவை தமிழ்ச்சொல்லாயின் வடவெழுத்தொரீஇ யென்றல் பொருந்தாமையானும் , வட சொல்லாதலறிக. (5) |