இயற்சொற் றிரிசொற்றிசைச்சொல் வடசொல்லென்னு நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக்கால் மெலியதனை வலிக்கவேண்டும்வழி வலித்தலும் , வலியதனை மெலிக்கவேண்டும்வழி மெலித்தலும் , குறைவதனை விரிக்க வேண்டும்வழி விரித்தலும் , மிகுவதனைத் தொகுக்கவேண்டும் வழித் தொகுத்தலும் , குறியதனை நீட்ட வேண்டும்வழி நீட்டலும், நெடியதனைக் குறுக்கவேண்டும் வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும் , செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டுதலை வலியாகவுடைய; எ - று. எ - டு : `குறுக்கை யிரும்புலி' (269) `முத்தை வரூஉங் காலந் தோன்றின்' (எழு - 194) என்பன வலிக்கும்வழி வலித்தல் . `சுடுமண்பாவை' `குன்றிய லுகரத் திறுதி' (சொல் -9 ) என்பன மெலிக்கும்வழி மெலித்தல் . `தண்ணந் துறைவன்' (குறுந் - 296) என்பது விரிக்கும்வழி விரித்தல் . `மழவு ரோட்டிய' (அகம் - 9) என்பது தொகுக்கும், `வழித்தொகுத்தல் குன்றி கோபங் கொடிவிடு பவள மொண்செங்காந்தளொக்கு நின்னிறம்' என்புழிச் செவ்வெண்ணின் றொகை தொக்கு நிற்றலின் இதுவுமது . `வீடு மின்' என்பது நீட்டும்வழி நீட்டல் . `பாசிலை' (புறம் - 54) யென்பது காட்டுவாருமுளர் . உண்டார்ந் தென்பது உண்டருந்தெனக் குறுகிநிற்றலிற் குறுக்கும் வழிக்குறுக்கல். `அழுந்துபடு விழுப்புண்' (நற்றிணை - 97) என்பதுமது பிறவுமன்ன. நாட்டல் வலிய வென்றது, இவ்வறுவகை விகாரமும் இன்னுழியா மென்று வரையறுக்கப்படா ; செய்யுள் செய்யுஞ் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய வென்றவாறு . நாட்டல் , நிலை பெறச் செய்தல். (7) |