இனிச் செய்யுளிடத்து விகாரவகையான் மொழிகள் தம்முட் புணருமாறு கூறுகின்றார். நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழிமாற்றுமென நான்கென்று சொல்லுப ; அந்நான்கு சொல்லுஞ் செய்யுளிடத்துத் தம்முட்புணருமுறையை; எ - று. நான்கு சொல்லு மென்பதூஉஞ் செய்யுளிடத் தென்பதூஉம் அதிகாரத்தாற் பெற்றாம். நிரனிறையுஞ் சுண்ணமும் மொழிமாற்றாத லொக்கு மாயினும், நிரனிற்றலும் அளவடியெண்சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமையான், அவற்றைப் பிரித்து அவ்வேறுபாட்டாற் பெயர்கொடுத்து, வேறிலக்கண மில்லாத மொழிமாற்றை மொழிமாற்றென்றார். இச் சூத்திரத்தான் மொழிபுணரியல் நான்கென வரை யறுத்தவாறு. (8) |