அந் நான்கினுள் , நிரனிறையாவது வினையானும் பெயரானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு நிற்பப் பொருள் வேறு நிற்றலாம்; எ - று. தொடர் மொழிப்பொருள் முடிக்குஞ் சொற்கண்ணதாகலான் முடிக்குஞ் சொல்லைப் பொருளென்றார். வினையினும் பெயரினு மென்றதனான் , வினைச்சொல்லான் வருவதூஉம், பெயர்ச்சொல்லான் வருவதூஉம் அவ்விரு சொல்லான் வருவதூஉமென நிரனிறை மூன்றாம். எ - டு :` மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் - கடிபுனன் மூழ்கி யடிசில்கை தொட்டு' என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறுவேறு நிற்றலின் , வினைநிரனிறை யாயிற்று. அவை மாசுபோகப் புனன்மூழ்கி, பசிநீங்க அடிசில் கைதொட்டு எனவியையும், `கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி' என முடிவனவும் முடிப்பனவு மாகிய பெயர்ச்சொல் வேறுவேறு நிற்றலின், பெயர் நிரனிறையாயிற்று. அவை நுசுப்புக்கொடி, உண்கண்குவளை, மேனிகொட்டை என வியையும். உடலு முடைந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலிரு ளாம்பல்பாம் பென்ற - கெடலருஞ்சீர்த் திங்க டிருமுகமாச் செத்து" என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறுவேறு நிற்றலின் , பொது நிரனிறையாயிற்று . அவை கடல் உடலும் , இருள் உடைந்தோடும் , ஆம்பல் ஊழ்மலரும் பாம்பு பார்க்கும் என வியையும்.நினையத்தோன்றி யென்றதனால், சொல்லும் பொருளும் வேறுவேறு நிற்குங்கால் நிரல்பட நில்லாது, களிறும் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே" என மயங்கி வருதலுங் கொள்க.(9) |