சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கணுளவாகிய எண்சீரைத் துணித்து இயையும் வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம்; எ - று. அளவடியல்லாதன விகாரவடியாகலிற் பட்டாங்கமைந்தில வாதலிற் பட்டாங்கமைந்த வீரடியெனவே, அளவடியாதல் பெறப்படும் . ஈரடியெண்சீர் விகாரவடியானும் பெறப்படுதலின் , அவற்றை நீக்குதற்குப் `பட்டாங்கமைந்த வீரடியென்றார்'. எனவே சுண்ணம் அளவடியிரண்டனுளல்லது பிறாண்டு வாராதென்பது. எ - டு :` சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன சுனை' என்புழி, ஆழ, மிதப்ப, நீத்து, நிலையென்பனவும், சுரை. அம்மி யானைக்கு, முயற்கென்பனவும் நின்றுவழி நிற்ப இயையாமையின் சுரை மிதப்ப, அம்மி யாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக்கூட்ட இயைந்தவாறு கண்டு கொள்க.சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்திலிற் சுண்ண மென்றார். (10) |