அடிமறிச்செய்யுளாவது, சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தநிலையிற் றிரிந்து ஒன்ற னிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும்; எ - று. எனவே எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமென்பதாம். எ - டு :` மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே' என வரும். இதனுட் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியுந் தடுமாறியவாறு கண்டுகொள்க.பெரும்பான்மையும் நாலடிச்செய்யுட்க ணல்லது இப்பொருள் கோள் வாராதென்க. `நிரனிறைதானே' `சுண்ணந்தானே' `மொழிமாற்றியற்கை' என்பன போல ஈண்டும் அடிமறிச்செய்தியென்பதனைக் குறளடியாக்கி. அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருடெரி மருங்கின் என்று சூத்திரமாக அறுப்பாரு முளர். (11) |