பொருளாராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதலும் வரையார்; எ - று. சீர்நிலை திரியாது தடுமாறு மென்றாராகலின் சீர்நிலை திரிதலும் ஒரு வழிக்கண்டு எய்தியதிகந்துபடாமற் காத்தவாறு. இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க. எருத்துவயி னென்பதற்கு ஈற்றயற்சீர்வயி னென்று பொருளுரைத்து. `சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே சார னாட நீவரு தீயே வார லெனினே யானஞ் சுவலே' என்புழி அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயிற் சென்று திரிந்ததென்று உதாரணங் காட்டினாரால் உரையாசிரியரெனின் : - யானஞ்சுவலென நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் . இவ்வாறு திரிதல் பொருந்தாமையின், அவர்க்கது கருத்தன்றென்க.எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயினும், உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றுங் கூறினார். `உரைப்போர் குறிப்பி னுணர்வகை யன்றி யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டல யாப்பே' என உரைப்போர் குறிப்பான் முதலுமிடையு மீறுங்கோடல் பிறருங் கூறினாரென்பது.(12) |