மொழிமாற்றினதியல்பு, பொருளெதி ரியையுமாறு சொன்னிலையை மாற்றி முன்னும் பின்னும் கொள்ளும் வழிக் கொளுவுதலாம்; எ - று. எ - டு :` ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி விறன்முள்ளூர் வேங்கை வீ தானாணுந் தோளா ணிறனுள்ளு ருள்ள தலர்' என இதனுள், பாரி பறம்பின்மேற் றண்ணுமைதானாணுந் தோளாள் எனவும், நிறன் விறன்முள்ளூர் வேங்கைவீ எனவும், உள்ளூருள்ளதாகிய அலர் ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் எனவும், முன்னும் பின்னுங் கொள்வழி யறிந்து கொளுவப் பொருளெதிரியைந்தவாறு கண்டு கொள்க. மொழிமாற்று நின்று ஒன்றற்கொன்று செவ்வாகாமை கேட்டார் கூட்டியுணருமாற்றாற் கடாவல் வேண்டும். அல்லாக்கால், அவாய்நிலையுந் தகுதியுமுடையவேனும் அண்மையாகிய காரணமின்மையாற் சொற்கள் தம்முளியை யாவா மென்க.(13) |