1.கிளவியாக்கம்

3.இடம்

இயற்பெயரும் சிறப்புப் பெயரும் அமையும் வகை.

41சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.
 

வினைக்கொருங்கியலும்வழிச் சிறப்பினாகிய பெயர்க்கும் இயற்பெயரை உலகத்தார் முற்படக் கிளவார் பிற்படக் கிளப்பர் ; எ-று.

வினைக்கொருங்கியலும் என்பது ஏற்புழிக்கோடல் என்பதனாற் பெற்றாம்.

ஈண்டுச் சிறப்பாவது மன்னர் முதலாயினாராற் பெறும் வரிசை.

எ - டு: ஏனாதி1 நல்லுதடன், காவிதி2 கண்ணந்தை என வரும்.

உம்மையால் தவம் , கல்வி , குடி , உறுப்பு முதலாயினவற்றானாகிய பெயரும் கொள்ளப்படும். அவை முனிவனகத்தியன் எனவும், தெய்வப் புலவன் திருவள்ளுவன் எனவும் சேரமான் சேரலாதன் எனவும், குருடன் கொற்றன் எனவும் வரும்.

திருவீரவாசிரியன் மாந்தக்கொங் கேனாதி என இயற்பெயர் முன்வந்தனவாலெனின் : - அவை தொகைச்சொல்3லாகலான், அவற்றின் கண்ணதன்று இவ்வாராய்ச்சியென்பது. ஆண்டியற்பெயர் முன்னிற்றல் பண்புத்தொகை யாராய்ச்சிக் கட்பெறுதும்.

(41)

1. ஏனாதி - படைத்தலைவன்.

2. காவிதி - மந்திரி.

3. திருவீரவாசிரியன், மாந்தக் கொங்கேனாதி என்பன, திருவீரன் ஆசிரியன் மாந்தக் கொங்கன் ஏனாதி எனப்பிரிந்து நில்லாமல் ஈறுகெட்டுப் புணர்ந்து நின்றனவென்றோ அவற்றினிடையில் ஆகிய என்னுஞ் சொல் தொக்கு நின்றதென்றோ கொண்டு "அவை தொகைச் சொல்லாகலான் அவற்றின் கண்ணதன்று இவ்வாராய்ச்சியென்பது, ஆண்டியற் பெயர் முன்னிற்றல் பண்புத் தொகை யாராய்ச்சிக்கட் பெறுதும்" என்றார் சேனாவரையர். எனவே திருவீரவாசிரியன் மாந்தக் கொங்கேனாதி என்பவற்றை அவர் பண்புத்தொகையாகக் கொண்டமை புலனாம். ஏனாதி நல்லுதடன் காவிதி கண்ணந்தை என்பவற்றின் இடையிலும் ஆகிய என்னுஞ் சொல் விரிக்கலாமாகலின், திருவீரவாசிரியன் போன்றவை நச்சினார்க்கினியர் கூறியது போலப் பிற்கால வழக்கென்றும் சிறப்புப் பெயர் முற்படவரின் இயற்பெயர் திரியுமென்றும் கொள்வதே மிகப் பொருத்தமாம். நூற்பாவில் முன் என்றது இடமுன்.