செய்யுட்குரியசொல்லும், சொற்றொடுக்குங்காற்படும் விகாரமும் அவை செய்யுளாக்குங்காற் றம்முட்புணர்ந்து நிற்குமாறுமாகிய செய்யுளொழிபு உணர்த்தி இனி வழக்கிலக் கணத்தொழிபு கூறுகின்றார். த ந நு எ என்பனவற்றை முதலாக வுடையவாய்க் கிளைமை நுதலி வரும் பெயரும் பிரிக்கப்படா ; எ-று. அவையாவன தமன், தமள், தமர்: நமன், நமள், நமர்; நுமன் , நுமள், நுமர் ; எமன், எமள், எமர் ; தம்மான், தம்மாள், தம்மார் ; நம்மான், நம்மாள், நம்மார் ; நும்மான், நும்மாள், நும்மார் ; எம்மான், எம்மாள், எம்மார் எனவரும். உம்மையாற் பிறகிளைநுதற் பெயரும் பிரிக்கப் பிரியா வென்பதாம். அவை தாய், ஞாய், தந்தை, தன்னை என்னுந் தொடக்கத்தன. இவற்றைப் பிரிப்பப் பிரியாவென்றது என்னையெனின் : - வெற்பன் பொருப்பன் என்னுந் தொடக்கத்து ஒட்டுப்பெயர் வெற்பு + அன், பொருப்பு + அன் எனப் பிரித்தவழியும், வெற்பு பொருப்பு என்னு முதனிலை தம்பொருள் இனிது விளக்கும். தமன், எமன் என்பனவற்றைத் தம் + அன் . எம் + அன், எனப் பிரிக்கலுறின் தம் எம் என்பன முதனிலையாய்ப் பொருளுணர்த்துவனவாதல் வேண்டும் ; அவை பொருளுணர்த்தாமையான், தமன், எமன் என வழங்கியாங்குக் கொள்வதல்லது பிரிக்கப்படாமையின் ,அவ்வாறு கூறினாரென்பது . பிறவுமன்ன . அஃதேல், தாம் யாம் என்பன அவற்றிற்கு முதனிலையாகப் பிரிக்கவே, அவையுந் தம் பொருளுணர்த்து மெனின் :- தமன், எமன் என்பன தன் கிளை, என் கிளை எனவும் தங்கிளை, எங்கிளை எனவும் முதனிலை வகையான் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலுடைய ஒருமையுணர்த்துங்கால் தாம் யாம் என்பன பொருந்தாமையின் தான் யான் என்பனவே முதனிலையெனல் வேண்டும் . வேண்டவே இவ்வாறு பிரிப்பின் தமன் எமன் என ஓரொன்றிரண்டு சொல்லாதல் வேண்டுதலான் , எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையின் ஒரு சொல்லெனவே படும் ; இரண்டு சொல்லென்றல் நிரம்பாமையின் , அவ்வாறு பிரித்தலும் பொருத்தமின்றென்பது. கிளை நுதற்பெயர் விளிமரபின்கட் பெறப்பட்டமையாற் பெயரியலுணர்த்தாராயினார் அதனால் ஆண்டியைபுபட்டின்றாகலால் பிரிப்பப் பிரியா ஒருசொல்லடுக்கோ டியைய இதனை ஈண்டு வைத்தார். (14) |