9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

தொகை மொழிகள்

412வேற்றுமைத் தொகையே உவமத்தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று
அவ்வா றென்ப தொகைமொழி நிலையே.
 

இனித் தொகையிலக்கண முணர்த்துகின்றார்.

வேற்றுமைத்தொகை முதலாகத் தொகைச்சொல் ஆறாம்; எ - று.

வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல் லீறுந் தொகுதலிற் றொகையாயின வென்பாரும். அவ்வப்பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முளியைதலிற் றொகையாயின வென்பாருமென இருதிறத்தர் ஆசிரியர். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒரு சொன்னீர்மைப் படாதனவும் தொகை யாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும் வேழக்கரும்பு, கேழற்பன்றி என்புழித் தொக்கன வில்லை யெனினும் தொகையென வேண்டப்படுமாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலிற்றொகை யென்பார்க்கும் ஒட்டியொரு சொன்னீர்மைப் படுதலுந் தொகையிலக்கணமெனல் வேண்டும் . அதனான் உருபு முதலாயின தொகுதல் எல்லாத் தொகையினுஞ் செல்லாமையான் எல்லாத்தொகைக் கண்ணுஞ் செல்லுமாறு ஒட்டி யொருசொல்லாதல் தொகையிலக்கணமாய் முடிதலின், இவ்வாசிரியர்க்கு இதுவே துணிவெனப்படுமென்பது `அற்றாயின்' `உருபு தொகவருதலும்' (சொல் - 104) எனவும், `வேற்றுமை தொக்க பெயர்வயினானும்' (சொல் - 418) எனவும், `உம்மை தொக்க பெயர்வயினானும்' எனவும், `உவமைதொக்க பெயர்வயினானும்' எனவும் ஓதலால் அவை ஆண்டுத் தொக்கனவெனப் படுமன்றோவெனின்:- அற்றன்று, `அது வென் வேற்றுமை யுயர் திணைத் தொகைவயின்' (சொல் 94) என்புழி அதுவெனுருபு நின்று கெட்டதாயின் நின்ற காலத்துத் தினைவழுவாம் ; அத்திணைவழு அமைவுடைத்தெனின் விரிக்கின்றுழி நான்காமுருபு தொடராது அதுதன்னையே விரிப்பினும் அமைவுடைத்து; அதனான் முறைப்பொருடோன்றா நம்பிமகன் என இரண்டு சொற் றொக்கன் வென்பதே ஆசிரியர் கருத்தெனல் வேண்டும். அல்லதூஉம், வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை என்பன வற்றின்கண் வினையும் பண்பும் அன்மொழியுந் தொக்கு நில்லாமை யானும், அஃதே கருத்தாதலறிக. அதனான் உருபும் உவமையும் உம்மையுந் தொகுதலாவது தம் பொருள் ஒட்டிய சொல்லாற்றோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாது நிற்றலே யாம்.

வேற்றுமைத் தொகையென்பது வேற்றுமைப் பொருளையுடைய தொகையென்றானும் வேற்றுமைப் பொருடொக்க தொகை யென்றானும் விரியும். உவமத்தொகை உம்மைத் தொகை அன்மொழித்தொகையென்பனவும் அவ்வாறு விரியும். அன்மொழியாவது தொக்க சொல்லல்லாத மொழி. வினைத்தொகை பண்புத்தொகை யென்பன, வினையினது தொகை பண்பினது தொகையென விரியும். வினைபண்பென்றது அவற்றை யுணர்த்துஞ் சொல்லை. ஒரு சொல்லாற் றொகையின்மையிற் பிறிதொரு சொல்லொடு தொகுதல் பெறப்படும்.

இச் சூத்திரத்தாற் றொகைச்சொல் இனைத்தென வரையறுத்தவாறு.

(16)