9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

பண்புத் தொகை

416வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையினென்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி
இன்னது இதுவென வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே.
 

வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும் அவை போல்வன பிறவுமாகிய குணத்தை நுதலிப் பின் றொக்க வழிக் குணச்சொற் குணமுடையதனை யுணர்த்தலான் இன்ன திதுவென ஒன்றனை ஒன்று விசேடித்து இரு சொல்லும் ஒரு பொருளின்மேல் வரு மியல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத்தொகையாம்: எ - று.

நுதலியென்னுஞ் சினைவினையெச்சம் வருமென்னு முதல் வினையோடு முடிந்தது.

இயற்கையென்றது, தொக்குழிப் பண்புடையதனைக் குறித்தல் அத்தொகைச் சொல்லதியல் பென்பதல்லது காரணங் கூறப்படா தென்றவாறு. தொகைக்கணல்லது அச்சொல் தனிநிலையாய், உண், தின், செல், கொல் என்பன போலப் பொருளுணர்த்தாமையின், பண்புத் தொகையும் வினைத் தொகை போலப் பிரிக்கப்படாதாம்.

எ - டு : கருங்குதிரை என்பது வண்ணப் பண்பு. வட்டப்பலகை யென்பது வடிவு. நெடுங்கோ லென்பது அளவு . தீங்கரும் பென்பது சுவை. அன்னபிறவு மென்றதனான். நுண்ணூல், பராரை, மெல்லிலை, நல்லாடை என்னுந் தொடக்கத்தன கொள்க. அவை, கரிதாகிய குதிரை, வட்ட மாகிய பலகை எனப் பண்புச் சொல்லும் பண்புடைப் பொருளே குறித்தலான், இரு சொல்லும் ஒரு பொருளவாய் இன்ன திதுவென ஒன்றையொன்று பொதுமை நீக்கியவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன.

அஃதேல், கரிதாகிய குதிரை , வட்டமாகிய பலகை என்பன அத்தொகையின் விரியாகலிற் பண்புத் தொகை பிரிக்கப்படாதென்ற தென்னையெனின் :- அற்றன்று, தொகைப்பொரு ளுணர்த்துதற்குப் பிறசொற் கொணர்ந்து விரித்ததல்லது தன்சொல்லான் விரியாமையின் அவை விரியெனப்படா வென்க. வடநூலாரும் பிரியாத் தொகையும் பிற சொல்லான் விரிக்கப்படுமென்றார். கரியதென்னும் பண்பு கொள் பெயர் கருங்குதிரையெனத் தொக்கதென்றாரால் உரையாசிரியரெனின். அதனைப் பெயரெச்சம் வினைத்தொகை நிலைமொழி யென்றதற் குரைத்தாங் குரைத்து மறுக்க. பிறசொற்கொணர்ந்து விரிக்குங்கால் கரிய குதிரை. கரிதாகிய குதிரை, கரியது குதிரை என அத்தொகைப் பொருளுணர்த்துவன வெல்லாவற்றானும் விரிக்கப்படும்.

முதனிலையாவது கரியன், செய்யன், கருமை, செம்மை, என்பன வற்றிற்கெல்லாம் முதனிலையாய்ச் சொல்லாய் நிரம்பாது கரு செவ்வெனப் பண்புமாத்திர முணர்த்தி நிற்பதாம்.

என்ன கிளவியு மென்றதனால், சாரைப்பாம்பு, வேழக்கரும்பு, கேழற்பன்றி எனப் பண்பு தொகாது பெயர் தொக்கனவும் அத்தொகையாதல் கொள்க. இவற்றது சாரை முதலாகிய நிலைமொழி பிரித்த வழியும் பொருளுணர்த்தலின் இவற்றைப் பிரித்துப் புணர்த்தார். அஃதேல், பாம்பைச் சாரை விசேடித்தல்லது சாரையைப் பாம்பு விசேடித்ததின்றாகலின் ஒன்றை ஒன்று பொதுமை நீக்காமையாற் சாரைப்பாம்பென்பது முதலாயின பண்புத்தொகை யாயினவா றென்னை யெனின் : - நன்று சொன்னாய் ; விசேடிப்பதும் விசேடிக்கப் படுவதுமாகிய இரண்டனுள் விசேடிப்பது விசேடியாக்கால் அது குற்றமாம் ; விசேடிக்கப்படுவது விசேடித்தின் றென்றலும் விசேடிக்கப்படுதலாகிய தன்றன்மைக் கிழுக்கின்மையான், விசேடியாது நிற்பினும் அமையுமென்க. இவ்வேறுபாடு பெறுதற்கன்றே இன்னதிதுவென வரூஉமெனப் பின்மொழியை விசேடிப்பதாகவும், முன்மொழியை விசேடிக்கப்படுவதாகவும், ஆசிரியர் ஓதுவாராயிற் றென்பது. அற்றேனும், சாரையெனவே குறித்த பொருள் விளங்கலிற் பாம்பென்பது மிகையாம் பிறவெனின் :- அற்றன்று ; உலகவழக்காவது சூத்திர யாப்புப்போல மிகைச்சொற்படாமைச் சொல்லப்படுவதொன்றன்றி, மேற்றொட்டுங் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவதாகலின், அது கடாவன்றென்க . மிகைச்சொற் படாமைச் சொல்லப்படுமாயின், யான் வந்தேன், நீ வந்தாய் என்னாது வந்தேன், வந்தாய் என்றே வழங்கல் வேண்டுமென்பது. இனி ஒற்றுமை நயத்தால் என்புந்தோலு முரியவாதலாகிய உறுப்புஞ் சாரை யெனப்படுதலின், அவற்றை நீக்கலாற்பாம்பென்பதூஉம் பொதுமை நீக்கிற் றென்பாருமுளர். உயர்சொற் கிளவி, இடைச்சொற் கிளவி, உரிச்சொற் கிளவி என்புழியும், உயர் சொல், இடைச்சொல் உரிச்சொல்லென்பன சொல்லென் பதன்கட் கருத்துடையவன்றிக் குறிமாத்திரமாய் உயர்வு, இடை, உரி என்ற துணையாய் நின்றனவாகலின், சாரை யென்பது பாம்பை விசேடித்தாற்போல அவைகிளவி யென்பதனை விசேடித்து நின்றனவென்பது, அவ்வாற்றான் அமைவுடையவாயினுஞ், சூத்திரமாகலின் உயர்சொல், இடைச்சொல், உரிச்சொலெனவே யமையும் ; கிளவி யென்பது மிகையெனின்:- மிகையாயினும் இன்னோரன்ன அமைவுடையவென்ப துணர்த்துதற்கு அவ்வாறோதினாரென்பது.

(20)