இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைச் சொற்றிரளையும் தனக்குச் சார்பாகக் குறித்து நிற்கும் உம்மைத்தொகை; எ - று. எ - டு : உவாப்பதினான்கு என்பது இருபெயரானாய உம்மைத் தொகை. புலிவிற்கெண்டை என்பது பல பெயரானாய உம்மைத் தொகை. தூணிப்பதக்கு என்பது அளவுப்பெயரானாய உம்மைத் தொகை. முப்பத்து மூவரென்பது எண்ணியற்பெயரானாய உம்மைத் தொகை. தொடியரை யென்பது நிறைப்பெயரானாய உம்மைத் தொகை. பதினைந்தென்பது எண்ணுப்பெயரானாய உம்மைத் தொகை. இனி, அவை விரியுங்கால், உவாவும் பதினான்கும் எனவும். புலியும் வில்லுங் கெண்டையும் எனவும், தூணியும் பதக்கும் எனவும், முப்பதின்மரும் மூவரும் எனவும், தொடியும் அரையும் எனவும், பத்துமைந்தும் எனவும் விரியும். வேற்றுமைத்தொகை முதலாயின பலசொல்லாற் றொகுதல் சிறு பான்மை ; அதனான் உம்மைத்தொகை இரு சொல்லானும் பல சொல்லானும், ஒப்பத்தொகுமென்பது அறிவித்தற்கு இருபெயர் பலபெயரென்றார். கற்சுனைக் குவளையிதழ், பெருந்தோட் பேதை எனப் பிற தொகையும் பெரும்பான்மையும் பல சொல்லான் வருமாலெனின் :- கல்லென்பதுஞ் சுனையென்பதுங் கற்சுனை யெனத் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் இதழென்பதோடு தொக்குக் கற்சுனைக் குவளையென்பதனோடு தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் இதழென்பதோடு தொக்குக் கற்சுனைக் குவளையிதழென வொன்றாயிற்று. பெருந்தோளென்னுந் தொகை ஒரு சொல்லாய்ப் பேதையென்பதனோடு தொக்குப் பெருந்தோட் பேதையென வொன்றாயிற்று . அவை இவ்வாற்றானல்லது தொகாமையின் இரு சொற்றாகையேயாம். புலிவிற் கெண்டை என்புழி மூன்று பெயருந் தொகுமென்னாது முதற் பெயரொழித்தும் இறுதிப் பெயரொழித்தும் ஏனையிரண்டுந் தம்முட்டொக்கு ஒரு சொல்லாய்ப் பின் மற்றையதனோடு தொகுமெனின் : - முன்றொகு மிரண்டற்கும் ஓரியைபு வேறுபாடின்மையானும் . இரு தொகைப்படுத்தல் பலசெய்கைத்தாதலானும் அவை மூன்று பெயரும் ஒருங்கு தொக்கனவெனவே படுமென்பது. அளவின் பெயர் முதலாயின, இருபெயராயல்லது தொகாவென வரையறுத்தற்கு இருபெயர் பல்பெயரென அடங்குவனவற்றைப் பெயர்த்துக் கூறினார். கலனே தூணிப் பதக்கு, தொடியே கஃசரை, நூற்றுநாற்பத்துநான்கு என்புழித் தூணிப்பதக்கு கஃசரை, நாற்பத்துநான்கு என்பன ஒரு சொற்போல அளவுப்பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயருமாய் வழங்கப்பட்டு வருதலின் கலமுந் தூணிப்பதக்கும் தொடியும் கஃசரையும், நூறும் நாற்பத்துநான்கும் என இரு மொழி நின்று தொக்கவென்றலே பொருத்தமுடைமையறிக. உம்மைத்தொகை இன்ன பொருள் பற்றித் தொகுமென்னாது அவ்வறு கிளவியும் எனச் சொல்லேபற்றி ஓதினாரேனும், ஏற்புழிக் கோடலென்பதனான் `உயர்திணை மருங்கினும்மைத் தொகையே பலர் சொன் னடைத்து' (சொல் - 421) என்பதனான் எண்ணும்மைப் பொருட்கட் டொகுமென்பது பெறப்படும். எண்ணின்கண் வரும் இடைச்சொற் பலவேனும் தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப் பெயராகலான், உம்மைத் தொகையாயிற்று. (21) |