9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

அன்மொழித் தொகை

418பண்புதொக வரூஉங் கிளவி யானும்
உம்மை தொக்க பெயர்வயி னானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்
ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே.
 

பண்புச்சொற்றொகுஞ் சொல்லினும் , உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் ; இறுதிச்சொற்கள் நின்று நடக்கும் அன்மொழித்தொகை; எ - று.

பண்புத்தொகைபடவும் உம்மைத் தொகைபடவும் வேற்றுமைத் தொகைபடவும் அச்சொற்றொக்கபின் அத்தொகை அன்மொழித் தொகையாகாமையின் தொகுவதன் முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற்பற்றி வருமென்பது விளக்கிய தொகைவயினானு மென்னாது, `பண்புதொக வரூஉங் கியவி யானு, மும்மை தொக்கபெயர்வயினானும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும்' என்றார்.

இறுதிச்சொற் படுத்தலோசையாற் பொருள் விளக்கு மாறு வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளுங் கண்டுகொள்க.

(எ-டு) வெள்ளாடை , அகரவீறு என்பன பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை ; தகரஞாழல் என்பது உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை இனி , அவை வெள்ளாடையுடுத்தாள், அகரமாகிய ஈற்றையுடைய சொல் எனவும், தகரமுஞாழலுமாகிய சாந்து பூசினாள் எனவும், பொற்றொடி தொட்டாள் எனவும் விரியும்.

பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் பெரும் பான்மை யாகலின் , முறையிற் கூறாது அதனை முற் கூறினார் . வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறத்தலின் உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் சிறுபான்மை யாயினும் , ஒரு பயனோக்கி அதனை அதன்முன் வைத்தார். யாதோ பயனெனின்:-சிறுபான்மை உவமத்தொகை நிலைக்களத்தும் வினைத்தொகை நிலைக்களத்தும் அன்மொழித்தொகை பிறக்குமென்ப துணர்த்துதலென்க . அவை பவளவாய், திரிதாடி எனவரும். அவைதாம் பவளம்போலும் வாயையுடையாள் ; திரிந்த தாடியையுடையான் என விரியும். பிறவுமன்ன.

(22)