9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

தொகை மொழிகளிற் பொருள் நிற்குமிடம்

419அவைதாம்
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குட னிலையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்
அந்நான் கென்ப பொருள்நிலை மரபே.
 

முன்மொழிமே னிற்றலும் , பின்மொழிமே னிற்றலும் இருமொழிமே னிற்றலும் , அவற்றின் மேனில்லாது பிற மொழிமே னிற்றலுமென அத்தொகையும் அவற்றது பொருணிலைமரபும் நான்கென்று சொல்லுவர் ஆசிரியர்; எ - று.

தொகையும் அவற்றது பொருணிலைமரபும் ஒருவகையான் வேறாயினும் , ஒற்றுமை நயம்பற்றி அவைதாமென்றார்.

பொருணிற்றலாவது வினையோடியையுமாற்றான் மேற்பட்டுத் தோன்றுதல்.

எ - டு : வேங்கைப்பூ என்புழிப் பூவென்னும் முன்மொழிக்கட் பொருணின்றது . அது நறிதென்னும் வினையோடியையுமாற்றான் . மேற்பட்டுத்தோன்றியவாறு கண்டு கொள்க . மேல்வருவனவற்றிற்கும் ஈதொக்கும் , இடவகையான் முன்மொழியாயிற்று . அடைகடல் என்புழி அடையென்னும் பின்மொழிக்கட் பொருணின்றது . இடவகையாற் பின்மொழியாயிற்று. முன் பின்னென்பன காலவகையாற்றடுமாறி நிற்கும் . கடலுங் கடலடைந்த விடமுங் கடலெனப் படுதலின் , அடைகடலென்பது அடையாகிய கடலென இருபெயர்ப் பண்புத்தொகை. இனி வரையறையின்மையாற் சிறுபான்மை முன்மொழி பின்மொழியாகத் தொக்கதோராறாம் வேற்றுமைத்தொகை யெனவுமமையும் . உவாப்பதினான்கு என்புழி இருமொழி மேலும் பொருணின்றது. தன்னின முடித்தலென்பதனாற் பல பெயர்மே னிற்றலுங் கண்டு கொள்க. வெள்ளாடை என்புழித் தொக்க இருமொழி மேலும் நில்லாது உடுத்தாளென்னும் அன்மொழிமே னின்றது.

வேற்றுமைத் தொகைமுத னான்குதொகையும் முன்மொழிப் பொருள ; வேற்றுமைத்தொகையும் பண்புத்தொகையுஞ் சிறுபான்மை பின்மொழிப் பொருளவுமாம் . உம்மைத்தொகை இருமொழிப் பொருட்டு.

ஆறெனப்பட்ட தொகை பொருள்வகையால் நான்காமெனப் பிறிதொரு வகை குறித்தவாறு.

(23)