1.கிளவியாக்கம்

3.இடம்

இயற்பெயரும் சிறப்புப் பெயரும் அமையும் வகை.

42ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.
 

ஒரு பொருளைக் குறித்து வந்த பல பெயர்ச்சொற்கள், ஒருதொழிலே முடிபாகக் கூறாது பெயர்தோறும் வேறாகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒரு பொருளவாய் ஒன்றா ; எ-று.

ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்னாது, ஆசிரியன் வந்தான், பேரூர்கிழானுண்டான், செயிற்றியன் சென்றான் என வேறு வேறுதொழில் கிளந்தவழி வந்தானும் உண்டானுஞ் சென்றானும் ஒருவனாகாது வேறாய்த் தோன்றியவாறு கண்டு கொள்க.

எந்தை வருக, எம்பெருமான் வருக ,மைந்தன் வருக, மணாளன் வருக என்புழிக் காதல் முதலாயினபற்றி ஒரு தொழில் பலகால் வந்தமையல் லது வேற்றுத் தொழிலன்மையான், ஒரு தொழில் கிளத்தலேயாமென்பது.

ஈண்டுத் தொழிலென்றது முடிக்குஞ் சொல்லை.

ஆசிரியன் வந்தானென்று ஒருகாற் கூறி இடையிட்டு அவனையே பின்னொருகால் பேரூர்கிழான் சென்றான் என்று கூறியவழி ஒரு தொடரன்மையான் ஆண்டாராய்ச்சியில்லை யென்பது. அஃதேல் ஆசிரியன் வந்தான் பேரூர்கிழானுண்டான் செயிற்றியன் சென்றான் என இடையீடின்றி நின்றனவும் ஒரு தொடரன்மையின், ஆராய்ச்சியின்றாம் பிறவெனின் : - அற்றன்று : உட்டொடர் பலவாயினும் , அவற்றின் தொகுதியாய் அவன் தொழில் பலவுங் கூறுதற் பொருண்மைத் தாகிய பெருந்தொடர் ஒன்றெனவே படுமென்பது.

ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றிய னிளங் கண்ணன் சாத்தன் வந்துண்டு சென்றான் என்னாது , ஆசிரியன் வந்தான் பேரூர்கிழானுண்டான் செயிற்றியன் சென்றான் எனப்பெயர் தோறும் வேறு தொழில் கிளத்தல் மரபன்மையின், மரபு வழுக் காத்தவாறாயிற்று.

(42)