9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

தொகை மொழிகள் ஒருசொற் றன்மைய

420எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய.
 

அறுவகைத் தொகைச் சொல்லும் ஒருசொல்லாய் நடத்தலையுடைய; எ - று.

ஒரு சொன்னடையவெனப் பொதுப்படக் கூநியவதனான், யானைக்கோடு கொல்யானை என முன்மொழி பெயராகிய வழி ஒரு பெயர்ச் சொன்னடையவாதலும் , நிலங்கடந்தான் குன்றத்திருந்தான் என முன்மொழி வினையாயவழி ஒரு வினைச்சொன்னடைய வாதலுங்கொள்க. அவை உருபேற்றலும் பயனிலைகோடலு முதலாகிய வினைத்தன்மையு முடையவாதல் அவ்வச் சொல்லோடு கூட்டிக் கண்டு கொள்க.

நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் எனப் பெயரும் வினையுந்தொக்கன ஒருசொன்னீர்மை யிலவாகலிற் றொகை யெனப்படா வென்பாருமுளர். எழுத்தோத்தினுள் பெயருந்தொழிலும் பிரிந்தொருங் கிசைப்பவேற்றுமையுருபு நிலை பெறுவழியுந் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் (எழு - 123) என்றதனான், வேற்றுமையுருபு தொகப் பெயருந் தொழிலும் ஒருங்கிசைத்தல் ஆசிரியர் நேர்ந்தாராகலின் அவை தொகையெனவே படுமென்பது. கடந்தானிலம், இருந்தான் குன்றத்து என்பன ஒருங்கிசையாது பக்கிசைத்தலின் அவை தொகையன்மையறிக.

எல்லாத் தொகையு மொருசொன் னடைய என்றதனான், தொகையல்லாத தொடர்மொழியுள் ஒரு சொன்னடையவாவன சிலவுளவென்பதாம். யானை கோடு கூரிது, இரும்பு பொன்னாயிற்று, மக்களை உயர் திணையென்ப என்பனவற்றுள், கோடுகூரிது, பொன்னாயிற்று, உயர் திணை யென்ப என்னுந் தொகையல் தொடர்மொழி ஒரு சொன்னடையவாய், எழுவாய்க்கும் இரண்டாவதற்கும் முடிவாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன.

(24)