உயர்திணைக்கண் வரும் உம்மைத்தொகை பலர்க்குரிய ஈற்றான் நடக்கும்: எ - று. பொதுவிற் கூறினாரேனும், மாமூலபெருந்தலைச் சாத்தர் ; கபில பரண நக்கீரர் எனவரும். விரவுப்பெயர்த்தொகையும் அடங்குதற்கு உயர்திணைப் பெயரும்மைத் தொகை யென்னாது, உயர்திணைமருங்கினும்மைத்தொகை யென்றார். அவை ஒட்டியொருசொல்லாய் நிற்றலிற் பலரறிசொல் எனப்படும். பலரறிசொல் கபிலபரணன் என ஒருமையீற்றான் நடத்தல் வழுவாகலின் வழுக்காத்தவாறு. இதனானுந் தொகை ஒரு சொல்லாதல் பெற்றாம். ஒரு சொன்னீர்மை பெற்றின்றாயின், கபிலன் பரணன் என ஒருமைச்சொல் ஒருமையீற்றான் நடத்தற்கட்படும் இழுக்கென்னை யென்பது. (25) |