வாராவியல்பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும் என்னாவியல்பினவற்றை என்பனவாகச் சொல்லுதலும் அத்தன்மையானவெல்லாம் அவ்வப் பொருளியல்பான இத்தன்மைய வென்று சொல்லுங் குறிப்புமொழியாம்; எ - று. எ - டு : அந்நெறி யீண்டுவந்து கிடந்தது . அம்மலை வந்திதனோடு பொருந்திற்று எனவும் ; அவலவலென்கின்றன நெல், மழைமழையென்கின்றன பைங்கூழ் எனவும் வரும் அவை வரவுஞ் சொல்லுதலுமுணர்த்தாது இன்ன வென்பதனைக் குறிப்பாலுணர்த்தியவாறு கண்டுகொள்க. முலை வந்தன, தலை வந்தன என்பன காட்டுவாருமுளர். ஆண்டு வருதல் வளர்தற் பொருட்டாகலான், அவை ஈண்டைக் காகா வென்க. நிலம் `வல்லென்றது' நீர் தண்ணென்றது என்பன காட்டினாரால் உரையாசிரியரெனின் :- சொலற்பொருள வன்மையின், அவை காட்டல் அவர் கருத்தன்றென்க. அன்னவையெல்லா மென்றதனான், இந்நெறி யாண்டுச் சென்று கிடக்கும் ; இக்குன் றக்குன்றோடொன்றும் என்னுந் தொடக்கத்தன கொள்க. (26) |