மேற்கூறப்பட்ட ஒரு சொல்லடுக்கினுள் இசைநிறையடுக்கு நான்காகிய வரம்பையுடைத்து ; பொருளோடு புணர்தற்கண் விரைவுப்பொருள்பட அடுக்குவது மூன்றாகிய வரம்பையுடைத்து; எ - று. வரம்பாகுமென்றது, அவை நான்கினும் மூன்றினு மிறந்து வாரா, குறைந்து வரப்பெறு மென்றவாறு. எ - டு : `பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ' எனவும், தீத்தீத்தீ எனவும் வரும். அவை மும்முறையாயினும் இருமுறையாயினும் அடுக்கி வருதல் இவற்றைக் குறைத்துச் சொல்லிக் கண்டு கொள்க. இசைப்பொருளாவது செய்யுளின்பம். விரைவிக்குஞ் சொல்லை விரைசொ லென்றார். அசைநிலை இருமுறையல்லது அடுக்காமையின், அதற்கெல்லை கூறாராயினார். அஃதிருமுறை யடுக்குமென்பது யாண்டுப் பெற்றாமெனின், அடுக்கு என்பதனாற் பெற்றாம் . ஒருமுறை வருவது அடுக்கெனப் படாமையினென்பது. முன்னர்க் கூறப்படும் அசைநிலை அடுக்கி வருமென்பது அதிகாரத்தாற் கோடற்பொருட்டு. `இசைநிறை யசைநிலை' என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது இச்சூத்திரமிரண்டனையும் ஈண்டு வைத்தார். (28) |