9.எச்சவியல்

தொகைச்சொல் வகைதொகை யாவன

அசைநிலை அடுக்கு

426கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளத்த இயல்பா கும்மே.
 

கேட்டையெனவும், நின்றை யெனவும், காத்தை யெனவும், கண்டையெனவும் வரும் நான்கும் முன்னிலை யல்லாக்கால், மேற்சொல்லப்பட்ட அசைநிலையாம்; எ - று.

இவையுங் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் ஏற்றுவழி அசைநிலையாய் வருமாறு கொள்க.

நின்றை, காத்தை என்பன இக்காலத்துப் பயின்று வாரா.

வினாவிற் கடையாக அடுக்கிவந்தவழி முன்னிலையசை நிலையேயாம். இவை அடுக்கியும் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாதலுமுடைமையால், அந்நிலைமை நீக்குதற்கு, முன்னிலை யல்வழி யென்றார்.

முன்னுறக்கிளந்த வியல்பாகு மென்றதனால், முன்னைய போலச் சிறுபான்மை வினாவொடு வருதலுங் கண்டுகொள்க.

முன்னிலையல்வழி யென்பதற்கு முன்னையபோல வினாவொடு சிவணி நில்லாதவழி யென்றுரைத்தாரால் உரையாசிரிய ரெனின் :- அற்றன்று ; வினாவொடு சிவணல் இவற்றிற்கொன்றா னெய்தாமையின் விலக்க வேண்டா; அதனான் அவர்க்கது கருத்தன்றென்க.

இரண்டு சூத்திரத்தானும் கூறப்பட்டன வினைச்சொல்லாதலும் இடைச்சொல்லாதலு முடைமையான், வினையியலுள்ளும் இடையியலுள்ளுங் கூறாது ஈண்டுக் கூறினார்.

அஃதேல், ஆக, ஆகல் என்பது என்பனவற்றோடு இவற்றிடை வேற்றுமையென்னை? அவையும் வினைச்சொல்லாத லுடைமையானெனின் :- இசை நிறைத்தற்கும் பொருள் வேறுபாட்டிற்கும். அடுக்கி வரினல்லாது அடுக்காது வருதலே வினைச்சொற் கியல்பாம், ஆக, ஆகல் என்பது என்பன அடுக்கியல்லது நில்லாமையின், வினைச்சொல் இடைச்சொல்லாயின வெனப்படா, கண்டீர், கொண்டீர், என்பன முதலாயின வினைச்சொற்குரிய ஈற்றவாய் அடுக்கியும் அடுக்காதும் வருதலால் வினைச்சொல் அசைநிலையாயின வெனப்படும்; இது தம்முள் வேற்றுமை யென்க. அல்லதூஉம் வினாவொடு சிவணி நிற்றலாலும் வினைச்சொல்லெனவே படுமென்பது.

(30)