9.எச்சவியல்

வினைமுற்றின் வகை

அதன் இயல்பு

427இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச்
சிறப்புடை மரபின் அம்மூக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ இடத்தான் வினையினுங் குறிப்பினும்
மெய்ம்மை யானும் இவ்விரண் டாகும்
அவ்வா றென்ப முற்றியன் மொழியே.
 

முற்றுச்சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர்வென்னும் மூன்று காலமும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூன்றிடத்தும், உயர்திணையும் அஃறிணையும் இருதிணைப் பொதுவுமாகிய பொருடோறும், வினையானுங் குறிப்பானும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாமென்று சொல்வர் ஆசிரியர்; எ - று.

எ - டு : சென்றனன், கரியன் எனவும் ; சென்றது, கரிது எனவும் ; சென்றனை, கரியை எனவும் வரும்.

இடமுணர்த்தலுந் திணையும் பாலும் விளக்கலும் போல ஒரு சாரனவற்றிற்கே யாகாது, எல்லாமுற்றுச் சொற்குங்காலம் முற்சிறத்தலின் `சிறப்புடை மரபின் அம்முக் காலமும்' என்றார்.

வினையினுங் குறிப்பினும் என்புழி ஓரீற்றவாகிய வினையும் வினைக் குறிப்புமே கொள்ளப்படும். இவ்விரண்டாதற் கேற்பன அவையேயாகலான்.

மெய்ம்மையாவது பொருண்மை.

உயர்திணையும் அஃறிணையுமல்லது இருதிணைப் பொது வென்பதொரு பொருளில்லையாயினும், சென்றனை, கரியை என்பன செலவிற்கு வினை முதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம் பற்றி இருதிணைக் கண்ணும் சேறலின் அந்நிமித்தம் இருதிணைப் பொதுவெனப்பட்டது.

வினையினுங் குறிப்பினும் இவ்விரண்டாய் வருதலாவது தெரிநிலை வினையாற் றெற்றெனத் தோன்றலும் குறிப்பு வினையாற் றெற்றெனத் தோன்றாமையுமாம்.

முற்றி நிற்றல் முற்றுச்சொற் கிலக்கணமாதல் `முற்றியன் மொழியே' யென்பதனாற் பெற்றாம். முற்றிநிற்றலாவது இதுவென்பது வினையியலுட் கூறினாம் (சொல் - 235). திணையும் பாலும் இடமும் விளக்கல் எல்லா முற்றிற்கு மின்மையான் இலக்கணமன்மை யறிக.

உயர்திணை அஃறிணை விரவென்னும் பொருண் மேல் வினையும் வினைக்குறிப்புமாய் வருதல்பற்றி `அவ்வாறென்ப' வென்றார் , காலமும் இடமும் முதலாயினவற்றோடு கூட்டிப் பகுப்பப் பலவாம்.

ஊரானோர் தேவகுலம் என்றாற்போல மெய்ம்மை யானும் என்புழி ஆனென்பது தொறுமென்பதன் பொருட்டாய் நின்றது.

முன்னர்ப் பிரிநிலை வினையே பெயரே ( சொல் - 430) என்புழிப் பெயரெச்சமும் வினை யெச்சமுங் கூறுபவாகலின் அவற்றோடியைய முற்றுச்சொல்லையும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றுச் சொல்லும் பெயரெச்சமும் வினை யெச்சமுமென வினைச்சொன் மூவகைத்தாதல் இனிதுணரப்படுமென்பது.

உரையாசிரியர் வினையியலுள் ஓதப்பட்டன சில வினைச்சொற்கு முற்றுச் சொல்லென்று குறியிடுத னுதலிற்று இச்சூத்திரமென்றாராலெனின் :- குறியீடு கருத்தாயின் அவ்வாறென்ப முற்றியன் மொழியே என்னாது அவ்வாறு முற்றியன் மொழியே யெனல் வேண்டுமாகலான் அது போலியுரையென்க. முற்றியன் மொழியென்ப என மொழிமாற்றவே குறியீடாமெனின் : - குறியீடு ஆட்சிப்பொருட்டாகலின் அக்குறியான் அதனை யாளாமையான் மொழிமாற்றி யிடர்ப்படுவ தென்னையோ வென்பது. அல்லாதூஉம் முற்றியன் மொழியெனக் குறியிட்டாராயின் இவை பெயரெஞ்சு கிளவியெனவும். இவை வினையெஞ்சு கிளவி யெனவுங் குறியிடல் வேண்டும் ; அவ்வாறு குறியிடாமையானும் அது கருத்தன்றாம். அதனான் வினைச்சொல்லுள் இருவகையெச்ச மொழித்து ஒழிந்தசொன் முற்றிநிற்கு மென்றும், அவை இனைத்துப் பாகுபடு மென்றும் உணர்த்தல் இச் சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க.

(31)