9.எச்சவியல்

வினைமுற்றின் வகை

அதற்கு வேறு விதி

428எவ்வயின் வினையும் அவ்வியல் நிலையும்.
 

மூவிடத்தாற் பொருடோறும் இவ்விரண்டா மென மேற்சொல்லப்பட்ட கட்டளையுட்பட்டடங்காது பிறாண்டு வரும் வினையும் முற்றியல்பாய் நிலையும்; எ- று.

யார், எவன், இல்லை, வேறு என்பன இடமுணர்த்தாமையின் ; மேற்கூறிய கட்டளையினடங்காது பிறாண்டு வந்தனவாம். சிறப்பீற்றான் வருந்தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் பொருடோறும் வினையும் வினைக் குறிப்புமாய் வருதற்கு எய்தாமையின் `மெய்ம்மையானு மிவ்விரண் டாகும்' (சொல் - 427) கட்டளையுட்படாது பிறாண்டு வந்தனவாம். குறிப்பு வினைக்கீறாகாது தெரிநிலை வினைக்கீறாவனவுந் தெரிநிலை வினைக் கீறாகாது குறிப்பு வினைக் கீறாவனவும் சிறப்பீற்றவாம். அவை வினையியலுட் கூறிப்போந்தாம், யார் எவன் என்பன பாலும், இல்லை வேறு என்பன திணையும் பாலும் உணர்த்தா வாயினும் மேலைச் சூத்திரத்தான் முற்றுச்சொற்குப் பாலுந் திணையு முணர்த்தல் ஒருதலையாக எய்தாமையின் இடமுணர்த்தாமையே பற்றி ஈண்டுக் காட்டப்பட்டன. திணையும் பாலு முணர்த்தல் ஒருதலையாயின் `தன்மை முன்னிலை படர்கை யென்னு மம்மூவிடத்தான்' (சொல் - 427) என ஆசிரியர் முன்னிலையிடம் ஆண்டு வையாரென்பது.

முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமு முணர்த்துமென்பது இச் சூத்திரத் திற்குப்பொருளாக உரைத்தாரால் உரையாசிரியரெனின் :- அவை இடவேறுபாடுணர்த்தாது மூவிடத்திற்கும் பொதுவாய் நிற்றலின், அது போலியுரை யென்க.

இனி ஒருவரை:- மேலைச் சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருண் மேலும் வரும் எல்லா வினையும் முற்றுச்சொல்லாய் நிற்கும் என்றவாறு, ஈண்டுவினையென்றது வினைச் சொல்லை யாக்கு முதனிலையை, எல்லாவினையும் முற்றுச்சொல்லாமெனவே எச்சமாகல் ஒரு தலையன் றென்பதாம். ஆகவே, வினைச் சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச்சொல்லே யென்பதாம். எல்லாவினையும் முற்றுச்சொல்லாகலும், கச்சினன், கழலினன், நிலத்தன், புறத்தன் என்னுந் தொடக்கத்து வினைக்குறிப்பின் முதனிலை எச்சமாய் நில்லாமையும், வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. பிறவுமன்ன.

இவையிரண்டும் இச் சூத்திரத்திற்குப் பொருளாகக் கொள்க.

(32)