9.எச்சவியல்

வினைமுற்றின் வகை

அதற்கு முடிபு

429அவைதாம்
தத்தம் கிளவி அடுக்குந வரினும்
எத்திறத் தானும் பெயர்முடி பினவே.
 

மேற்சொல்லப்பட்ட முற்றுச்சொற்றாம் தத்தங் கிளவி பல அடுக்கிவரினும், தம்முட் டொடராது எவ்வாற்றானும் பெயரொடு முடியும்; எ- று.

எ - டு : உண்டான் தின்றான் ஆடினான் பாடினான் சாத்தன் ; நல்லனறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன் என வரும்.

அடுக்கி வரினு மென்ற உம்மையான் வந்தான் வழுதி; கரியன்மால் என அடுக்காது பெயரொடு முடிதலே பெரும்பான்மை யென்பதாம்.

தம்பாற் சொல்லல்லது பிறபாற் சொல்லொடு விராயடுக் கின்மையின் தத்தங்கிளவி யென்றார்.

என்மனார் புலவர் முப்பஃதென்ப என வெளிப்பட்டும் வெளிப்படாதும் பெயர்முடிபா மென்றற்கு எத்திறத்தானு மென்றார் . `எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி' (சொல் - 68) என்றதனான் , வெளிப்படாது நிற்றலும் பெறப்பட்டமையான் ஈண்டுக் கூறல் வேண்டா வெனின் :- ஆண்டு முடிக்கப்படும் பெயர்வெளிப்படாது நிற்றலுமுடைத்தென்றார் இது முடிக்கும் பெயராகலின் ஆண்டடங்கா தென்பது முடிக்கப் படுவதனோடு முடிப்பதனிடை வேற்றுமை , வேற்றுமை யோத்தினுட் கூறினாம். இன்னும் எத்திறத்தானு மென்றதனான் உண்டான் சாத்தன் ; சாத்தனுண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்க.

அஃதேல், முற்றி நிற்றலாவது மற்றுச் சொன்னோக்காமை யாகலின் முற்றிற்றேல் அது பெயர் அவாய் நில்லாது ; பெயர் அவாயிற்றேன் முற்றுச்சொல்லெனப்படாது; அதனான் முற்றுச் சொற் பெயர்கொள்ளு மென்றல் மாறு கொள்ளக் கூறலாமெனின் :- அற்றன்று ; உண்டான் சாத்தன் என்பது எத்தை யென்னும் அவாய் நிலைக்கட் சோற்றையென்பதனோடு இயைந்தாற்போல, உண்டான் என்பது . யாரென்னும் அவாய் நிலைக்கட் சாத்தனென்பதனோடு இயைவதல்லது, அவாய் நிலையில் வழி உண்டானெனத் தானே தொடராய் நிற்றல் வினையியலுள்ளுங் கூறினா மென்பது, அஃதேல், சாத்தனென்னும் பெயர் சோற்றையென்பதுபோல் அவாய்நிற்றலையுள்வழி வருவதாயின், எத்திறத்தானும் பெயர் முடிபினவே என விதந்தோதல் வேண்டாவாம் பிறவெனின் : - நன்றுசொன்னாய் ; அவாய் நிற்றலை யுள்வழி வருவது அவ்விரண்டற்கும் ஒக்குமேனும், உண்டானென்ற வழி உண்டற்றொழிலாற் செயப்படுபொருள் உய்த்துணர்ந்து பின் அதன்வேறுபாடறியலுறிற் சோற்றையென்பது வந்தியைவதல்லது . சொற்கேட்ட துணையான் எத்தையெனக் கேட்பான் செயப்படுபொருள் வேறுபாடு அறிதற்கு அவாவாமையின், சோற்றை யென்பது வருதல் ஒருதலையன்று . இனி உண்டானென்னுஞ் சொல்லாற் பொதுவகையான் வினைமுதலுணர்ந்து கேட்பான். அதன் வேறுபாடறிய லுறுதலின் சாத்தனென்பது வருதல் ஒருதலையாம். அதனான் இச் சிறப்பு நோக்கி விதந் தோதி னாரென்பது.

(33)