தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விராய்வரப்பெறும் ; எ-று. என் சொல்லியவாறோ எனின் : - உயர்திணைச்சொல்லும் அஃறிணைச் சொல்லும் எண்ணுதற்கண் விராய் வந்து உயர்திணை முடிபு கொள்ளினும், அஃறிணைமுடிபு கொள்ளினும் வழுவாமாகலின், 'மயங்கல்கூடா தம்மரபின' (சொல்-11) எனவே அவை விராய் எண்ணப் படாமையும் எய்தி நின்றது; தன்மைப் பன்மைச் சொல்லாய் அஃறிணைச் சொல்லும் முடியுமாகலால்,தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விராய்வந்து உயர்திணைமுடிபு கொள்ளினும் அமையும் எனத் திணைவழுக் காத்தவாறு. எ - டு: யானும் என்னெஃகமும் சாறும் என வரும். பன்மைத் தன்மைவினைகோடல் எற்றாற் பெறுதுமோ எனின்:-தன்மைச் சொல்லே யென்றதனானும், `பன்மை உரைக்குந் தன்மைக் கிளவி எண்ணியன் மருங்கில் திரிபவை யுளவே' (சொல்-209) என்பதனானும் பெறுது மென்பது. 'அஃதேல், எண்ணியன் மருங்கில் திரிபவை உளவே' என்பதனான் விராய்வந்து உயர் திணைமுடிபு கோடலும் பெறப்படுதலின், இச்சூத்திரம் வேண்டா எனின்;- உயத்துணர்ந் திடர்ப்படுவது எடுத்தோத்தில் வழி என மறுக்க.(43) |