9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

அவற்றின் பாகுபாடு

430பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீ ரைந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி.
 

முற்றுச்சொல் லுணர்த்தி எச்சமாமா றுணர்த்துகின்றார். எஞ்சு பொருட்கிளவி கொண்டல்லது அமையாமையின் எச்சமாயினவும் ஒரு தொடர்க்கொழிபாய் எச்சமாயினவுமென அவை இருவகைப்படும்.

பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் எஞ்சுபொருட் கிளவியாம்; எ - று.

அவற்றுட் கடைநிலை மூன்றும் ஒருதொடர்க் கொழிபாய் எச்சமாயின. அல்லன எஞ்சுபொருட்கிளவியான் முடிவன. எஞ்சு பொருட் கிளவியெனினும் எச்சமெனினு மொக்கும்.

பெயரெச்சம் வினையெச்சம் பெயர் வினையான் முடிதலின் , ஆகு பெயராற் பெயர் வினையென்றார்.

ஆயீரைந்து மெஞ்சுபொருட்கிளவி யென்றாரேனும் எஞ்சு பொருட்கிளவி பத்துவகைப்படுமென்பது கருத்தாகக்கொள்க.

எச்சமாவன ஒருசார் ; பெயரும் வினையும் இடைச்சொல்லுமாதலின், பெயரியன் முதலாயினவற்றுட் பத்தும் ஒருங்குணர்த்துதற் கேலாமை யறிக.

முடிவும் பொருளு மொத்தலான் , என்றென்பதனை என வின்கணேற்றினார்.

(34)