வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் முடிபாம்; ஆண்டைக் குறிப்புவினை ஆக்க வினையோடு வரும்; எ - று. எ - டு : உழுது வந்தான்; மருந்துண்டு நல்ல னாயினான் என வரும். உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப்பெயரோடு முடிதல் நினையத் தோன்றிய வென்றதனாற் கொள்க. வினையெச்சத்திற்கு முடிபு வினையியலுட் கூறப்பட்டமையான் இச்சூத்திரம் வேண்டா வெனின்;- இதற்கு விடை ஆண்டே கூறினாம். `வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான்றண்ணியளே;' (குறுந் - 84) `வில்லக விரலிற் 1பொருந்தியவாறு நல்லகஞ் சேரி னொருமருங் கினமே' (குறுந் - 370) எனவும்; கற்றுவல்லன் பெற்றுடையன் எனவும் வினைக்குறிப்பு ஆக்கமின்றி வந்தனவாலெனின்:- ஆக்கமொடு வருமென்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் சிறுபான்மை ஆக்கமின்றியும் வருமென்பது. (36)
1. பொருந்தியவர் எனவும் பாடம். |